Saturday, January 5, 2019

Atheism/ Is it an Objective of Devil?? Part IX

நாம் கடவுளைப் புறக்கணிக்கிறோமா?

                    இந்த உலகில் நான் கண்ட மற்றுமொரு நாத்திகத்திற்கீடான செயல் தான், “ignorance” என்று ஆங்கிலத்தில் பொருள் படும் புறக்கணிக்கும் செயல். இவற்றை நான் கிறிஸ்தவர்களிடமும் காணத் தவறவில்லை. நாம் புறக்கணித்தல் என்றவுடன் நம்மை விட வசதியிலோ அல்லது படிப்பறிவிலோ அல்லது உத்தியோக ரீதியிலோ சற்று குறைவாகத் தோன்றுபவர்களைப் பேசாமல் இருந்தோ அல்லது அவர்களை மதிக்காது இருப்பது போன்றவை தான் என்று நினைத்துக் கொள்கிறோம். அது, பெருமை என்னும் மற்றொரு நாத்திக வழியைத் தான் சேரும். பொதுவாக கடவுளின் வார்த்தைகளை நாம் கேட்க மறுப்பது கூட புறக்கணித்தலில் சேரும் என்பதை நாம் மறுக்க இயலாது. இவற்றை நான் பல்வேறு இடங்களில் கண்டிருக்கிறேன். உதாரணமாக நான் கடவுளின் வார்த்தைகளை நண்பர்களிடம் கூற முற்படும் போது அவர்கள் விடும் பெருமூச்சு “என்னடா இவன் ஆரம்பிச்சுட்டான்” என்று அவர்கள் கூறுவது போல் இருக்கும். அவர்கள் கடவுளின் வார்த்தைகளை கேட்க விரும்பவில்லையா? அல்லது என் வாயிலிருந்து அவற்றைக் கேட்க விரும்பவில்லையா? என்பது எனக்குப் புரிவதில்லை. அது எப்படியோ இருந்து விட்டு போகட்டும் என்று என்னால் விட்டு விட முடிவதில்லை. நான் இவற்றை பொல்லாத ஆவிகளின் செயல்களாகத்தான் பார்க்கிறேன். பொல்லாத ஆவிகள் நம்மை குறி வைத்து தாக்குவதாக நான் உணர்கிறேன். நான் பார்த்து வரும் பல இடங்களில் வேதாகமத்தைப் பற்றிய விவாதங்களை இன்று வரைக் கேட்டது கிடையாது. எனக்கு ஆரம்ப காலங்களில் வேதாகமத்தின் மீது பிடிப்பில்லாமல் போனதற்கு இவற்றை ஒரு காரணமாகக் கூறலாம். வேதாகமத்தின் மீதான அவற்றிலுள்ள வசனங்கள் மீதான விவாதங்கள் தான் மிகவும் அத்தியாவசியமானது இந்தக் காலகட்டங்களில்.

ஆனால் நான் அறிந்த கிறிஸ்தவர்களில் பலர் அவ்வாறு விவாதிப்பதில்லை என்பது வேதனையான விஷயம். இவற்றை நான் புறக்கணித்தல் என்னும் பிரிவின் கீழ் கொண்டு வருகிறேன். கடவுளின் வார்த்தைகளைப் புறக்கணித்தல் ஒரு விதத்தில் நாத்திகத்தில் தான் சேருகிறது. நாத்திகம் கடவுளுக்கு எதிராக சாத்தான் செய்யும் சதி என்பதை உணர்ந்த நம்மால் அந்த நாத்திகத்தில் சேரும் பிரிவுகளை காண முடிவதில்லை இதுவும் சாத்தானின் ஒரு விதமான சதிச் செயலாகவே இருக்கிறது. நாம் கடவுளின் வார்த்தைகளை தியானித்துக் கற்றுக் கொண்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முற்பட வேண்டும். இதுவும் கடவுளுக்காக நாம் செய்யும் ஊழியக் கணக்கில் தான் சேரும் என்பது மறுக்க முடியாத உண்மை.

அப்போஸ்தலனாகிய பவுலின் கடிதங்கள் மிகவும் முக்கியமாக விவாதிக்கப் பட வேண்டியவை, விவாதம் என்பதை விட அவைப் பகிரப் பட வேண்டியவை.  என்னைப் போன்ற இளையவர்களுக்கு அவைப் புரிந்ததுக் கொள்வதற்குச் சற்றுக் கடினமாகப் படும். பெரியவர்களின் அனுபவங்கள் மற்றும் அவர்களின் புரிதல் திறன் ஆகியவை பவுலின் கடிதங்களை மட்டுமல்ல அனைத்து வசனங்களையுமே புரிந்துக் கொள்வதிலிருக்கும் குறைபாட்டை நீக்கும் என்பதில் ஐயம் இல்லை. இவை அனைத்துமே விவாதங்களினூடே சாத்தியமாகின்றன. இப்படி பட்ட விவாதங்களை ஏன் நமது சபைகள் ஆதரிப்பதில்லை என்பது எனக்குப் புரியவில்லை. கடவுளின் வார்த்தைகளை உணர்வது இந்த ஜீவியத்தில் மிகவும் இன்றியமையாத ஒன்று. என் அனுபவத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் கேட்கும் செய்திகள் மட்டுமே கடவுளின் எண்ணங்களை நமக்கு உணர்த்த முடியாது என்பதை தெளிவாகத் தெரிந்து கொண்டேன். இவற்றிற்காக நாம் என்ன செய்யப் போகிறோம்? புறக்கணித்தல் என்னும் நாத்திகத்தில் இந்த பாதையிலேயே தொடர்ந்து பயணிக்கப் போகிறோமா? என்பதை சிந்தித்துப் பார்க்கும் நேரம் இது
கடவுளின் வார்த்தைகளைப் புறக்கணிப்பது அவரையே புறக்கணிப்பதற்குச் சமமாகும். இவை எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நாத்திகத்தில் தான் சேருகின்றன.  கடவுளின் வார்த்தைகளின் மீதான விவாதங்கள் இன்றைய இளைஞர்கள் மத்தியில் நல்ல நம்பிக்கையை வளர்க்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. வழி தவறி வாழும் பல இளைஞர்களுக்கு இது போன்ற விவாதங்கள் நல் வழிகளைக் காட்டும். வாட்ஸ் ஆப் மற்றும் முக நூல் போன்றவற்றில் மூழ்கிக் கிடக்கும் இளைஞர்களை காப்பதற்கு கடவுளின் வார்த்தைகள் மட்டுமே ஒரே வழி என்று நான் கருதுகிறேன். அவை மட்டுமல்ல ஒரு நல்ல ஆரோக்கியமான விவாதமானது பல குழப்பங்களையும் தீர்க்கும் திறன் வாய்ந்ததாக இருக்கும் என்று அறிவியல் கூறுகிறது. நான் பணி புரியும் ஆராய்ச்சித் துறையிலும் விவாதங்கள் மிகவும் முக்கியமான அங்கமாக கருதப்படுகின்றது. கடவுளின் வார்த்தைகள் மீதான விவாதங்களை நாம் அதிகப் படுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நாம் அதிகமாக விவாதிப்பது கடவுளின் வார்த்தைகளாகத்தான் இருக்க வேண்டும். இதை நாம் வாழ்வில் கடை பிடிப்போமா?? அடுத்தக் கட்டுரையில் சந்திக்கலாம்.
      நன்றி, வாழ்க இயேசு நாமம்…!

Monday, December 17, 2018

Atheism/ Is it an Objective of Devil?? Part VIII


நாம் கடவுளை நிஜமாகவே பின்பற்றுகிறோமா??
வணக்கம்,
சென்ற கட்டுரையில் கூறியிருந்தது போல, நாத்திகம் காணப்படும் இடங்களை தொடர்ச்சியாக விவரிக்க முற்படுகிறேன். நாத்திகத்தை மற்றுமொரு வழியாகவும் நான் காண்கிறேன், அதுதான் சுயநலம். இதை நான் நிறைய கிறிஸ்தவர்களிடம் (என்னையும் சேர்த்து) கண்டிருக்கிறேன். சுயநலம் என்பது கண்டிப்பாக நமக்கு பரத்திலிருந்து கிடைக்கும் நன்மை கிடையாது. அது பேய்த் தனமான, சாத்தானிடமிருந்து நமக்குக் கிடைக்கக் கூடிய ஒரு சாபமாகவே இருக்கிறது. சுய நலத்தை நாம் நம் மனதில் அணிந்து கொண்டிருந்தால் அது நாம் கடவுளுக்கு எதிரான ஒரு சக்தியை நேரடியாக வணங்குவதற்குச் சமமாகும். 

நாத்திகவாதிகளிலே ஒரு பிரிவு உண்டு, அதாவது “morality” என்று ஆங்கிலத்தில் பொருள்படும் நன்னெறிகளை கடைப் பிடிப்பவர்கள். ஆனால் நான் எந்த ஒரு நாத்திகவாதியையும் கிறிஸ்தவ மிஷனெரிகளுக்கு இணையான ஒரு சவாலான ஊழிய தளங்களில் கண்டதில்லை. கடவுளுக்காக எதையும் செய்ய துணிந்த மிஷனெரிகள் இயேசு கிறிஸ்து நமக்குக் கற்று கொடுத்த அனைவரையும் அன்பு கூர்ந்து, அனைவரையும் சமமாகக் கருதி, அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு அவர்கள் மற்ற கிறிஸ்தவர்களின் உதவியுடன் பல்வேறு நற்செயல்களை செய்து வருகின்றனர். ஒரு கூறல் உண்டு, “நாத்திகவாதி நன்னெறிகளைக் கடைபிடிப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை” என்று. ஆம், அவர்கள் நாத்திகம் பேச காரணமே அவர்கள் நன்னெறிகள் என்று இயேசு கிறிஸ்து நமக்குக் கட்டளையிட்ட பல செயல்களை கடைபிடிக்க விரும்பாதது தான். இதை நான் முந்தையக் கட்டுரைகளிலேயே விவரித்துக் கூறியிருக்கிறேன். இன்றையக் கிறிஸ்தவர்களில் இந்த நன்னெறிகளைக் கடைப்பிடிப்பவர்கள் மிகவும் குறைவே. பாவத்திலிருந்து நம்மை மீட்க நமக்காக தன் உயிரை மாய்த்துக் கொண்ட இயேசு கிறிஸ்துவுக்காக நாம் செலுத்தப் போகும் நன்றி இந்த நாத்திகப் பாதை தானா?

இன்னும் தெளிவாய் சொல்லப் போனால் சுயநலம் நம்மில் இருக்குமானால் நாம் கடவுளை வணங்கியும் பலனில்லை. நாம் பிறர் நமக்குச் செய்யும் தவறுகளை மன்னிக்கவில்லை என்றால் கூட அது சுயநலக் கணக்கில் தான் சேருகிறது என்பதை நாம் மறுக்க இயலாது. இந்த நிலையில் நம்மை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.  ஆம், நான் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்த சமயத்தில் இயேசு கிறிஸ்துவை தொழாமலிருப்பது தான் நாத்திகத்தில் சேரும் என்று நினைத்தேன். ஆனால், நாளடைவில் இயேசு கிறிஸ்துவை தொழுது வரும் நாமே ஒரு வகையில் நாத்திக வாதிகளாகத்தான் செயல்பட்டு வருகிறோம் என்பது எனக்குப் புரிந்தது. கிறிஸ்துவுக்குள்ளான நமது நம்பிக்கையை அவரது வார்த்தைகளை பின்பற்றுவதன் மூலம் தான் நாம் காண்பிக்க முடியும் என்பது எனக்கு புரிந்தது. அவரது வார்த்தைகளை நாம் பின்பற்றுகிறோமா? எனக்கு இந்த நேரத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் பிறரிடம் அன்பு செலுத்துவது பற்றி கூறிய வார்த்தைகளான “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை” என்ற வார்த்தைகள் நினைவிற்கு வருகின்றன. நாம் மாற வேண்டிய நேரம் இதுதான். நம்மை முழுதும் கடவுளிடம் ஒப்படைத்து அவரது அன்பை அனைவருக்கும் உணர்த்தும் விதமாய் நடப்போமா??
மீண்டும் சந்திப்போம்!!!.
வாழ்க இயேசு நாமம்..

Friday, December 7, 2018

Atheism/ Is it an Objective of Devil?? Part VII


கடவுளை நாம் நேசிக்கிறோமா?
நாத்திகம் என்பது சாத்தானின் ஒரு வேலையாக இருக்குமோ? என்ற கண்ணோட்டத்தோடு தான் நான் இந்த வலைத் தொடரை எழுதத் தொடங்கினேன். ஆனால் கடந்த சில நாட்களில் நான் கற்ற மற்றும் பெற்ற சில அனுபவங்களை வைத்து பார்க்கும் போது எந்தவித சந்தேகமும் இல்லாமல் அது சாத்தானின் வேலை தான் என்பது நிரூபணமாகிறது. ஆம், நான் கடந்த வாரத்தில் தான் “கெவின் ஹாவிந்த்” எனப்படும் ஒரு அமெரிக்க முனைவர் பட்டம் பெற்ற, கடவுள் தான் உலகைப் படைத்தார், என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கத் துடித்த ஒரு மனிதரைப் பற்றி இணையதளம் வாயிலாக அறிந்தேன். அவர் நாத்திகவாதிகளான இரண்டு பேராசிரியர்களுடன் நடத்திய விவாதம் மிகவும் பிரபலம் வாய்ந்ததாகவும், ஆழமான கருத்துடையதாகவும் கருதப்படுகின்றது. அவர்கள் இருவரும், நீங்கள் கடவுள் உலகைப் படைத்தார் என்று கூறுகிறீர்கள், ஆனால் அந்த கடவுளை யார் படைத்தார் என்பதைக் கூறவில்லையே என்ற கேள்வியை எழுப்பிய போது அவர் அதற்கு அறிவியல் அடிப்படையிலேயே, அதுவும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்னும் இயற்பியலாளரின் கோட்பாட்டோடு தொடர்புப் படுத்தி பதில் அளித்திருந்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய ஒவவொரு காணொளிகளாக உலாவிப் பார்க்கத் தொடங்கினேன். அவரின் காணொளிகள் அனைத்துமே அறிவியலுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பி வந்தன. 2005 வரையிலான காணொளிகளை மட்டுமே என்னால் காண முடிந்தது. அதன் பிறகு ஒரு மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு 2016 ஆம் ஆண்டிலிருந்து இருந்த காணொளிகளை காண முடிந்தது. இடைப் பட்ட நாட்களில் அவர் ஒன்றுமே செய்யவில்லையா என்று ஆராய்ந்தப் பொழுது தான், அவர் செய்கைகளால் அதிருப்தி அடைந்திருந்த அமெரிக்க அரசாங்கம் மற்றும் பல அறிவியலை சார்ந்து வாழ்ந்து வந்த நிறுவனங்கள் அனைத்துமே அவர் மீது பொய்யான வழக்குளைப் போட்டு அவரை சிறைச் சாலையிலேத் தள்ளியிருந்ததுத் தெரிய வந்தது. அவரைச் சிறைப் பிடிக்கச் சென்ற போது போலீசார் மிகவும் மோசமாக அவரிடமும் அவர் மனைவியிடமும் நடந்துக் கொண்டதாகத் தெரிகிறது. இதனால் அவர் மனைவி விவாகரத்து வாங்கி அவரைப் பிரிந்துச் சென்றிருக்கிறார். அவரது சொத்துக்கள் அனைத்துமே முடக்கப்பட்டிருந்தன. 10 வருட சிறை வாசத்திற்குப் பிறகு அவர் 2015 ஆம் ஆண்டு இறுதியில் தான் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார். மீண்டும் அவர் தன் ஊழியத்தை செய்து வருகிறார். இவ்வளவு அடிகள் வாங்கியும் அவர் சளைக்கவில்லை. மீண்டும் தேவப் பணியைத் தொடர்கிறார்.
Dr. Kevin Hovind
அவர் மீது வீண் பழி சுமத்திய நாத்திக வாதிகளின் அச்செயல் சாத்தானின் செயலாகத்தான் இருக்க வேண்டும். நிரந்தரமாக அவரை அழிக்க நினைத்த சாத்தானின் சூழ்ச்சியை கடவுள் முறியடித்து அவர் பணியை மீண்டும் தொடர உதவி செய்தார்.  

நாத்திகத்தை நான் கிறிஸ்தவர்களின் இன்னொரு செயல் வழியாகவும் காண்கிறேன். இன்று என் அலுவலகத்தில் என்னுடம் பணிபுரியும் ஒரு கிறிஸ்தவ நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த போது தான் எனக்குத் தெரிந்தது நாத்திகம் இன்னொரு வாயிலாகவும் இந்த சமூகத்தில் உலவிக் கொண்டிருக்கின்றது என்பது. ஆம், அவர்கள் அறியாமையால் மக்கள் பாகால் மற்றும் மாற்று தெய்வங்களை வணங்குவதைப் பொருட்படுத்த விரும்பவில்லை. அப்படி வணங்குவது அவரவர் விருப்பம் எனவும், அவர்களைத் திருத்துவதால் நமக்கு என்ன நன்மை விளையப் போகிறது எனவும் வினவினார். இந்தக் கேள்வியை ஒரு நாத்திக வாதியின் கேள்வியாகவே நான் பாவிக்கிறேன். நம்மை நேசித்து நமக்காக உயிரைக் கொடுத்த இயேசு நாதர் இவ்வாறு நினைத்திருந்தால் நம் நிலைமை என்னவாக இருந்திருக்குமோ? அது மட்டுமில்லாமல் நம்மைப் போல் பிறனையும் நேசிக்க அவர் கூறியதன் பொருள், சுவிஷேத்தை அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் பிரசிங்கப்பது மட்டுமே என்பதை நாம் உணர வேண்டும்.

நான் சிறிதும் எதிர் பாராதது கிறிஸ்தவர்களின் இந்த மனநிலை தான். நடைமுறையில் இவற்றைக் கொண்டு வருவது சற்றுக் கடினம் தான். ஆனால் முடியாத காரியம் அல்ல. நம்மை அளவு கடந்து நேசிக்கும் நம்முடைய தெய்வம் இயேசு கிறிஸ்துவை நாமும் நேசிக்கிறோம் என்றால் இது சாத்தியமே!. நான் முதலில் இந்த வலைப்பதிவை எழுதுவது உபயோகமாக இருக்குமா என்ற ஒரு ஐய்யத்துடன் தான் ஆரம்பித்தேன். ஆனால், இன்றோ பல விஷயங்களை நான் கற்றுக் கொள்ள மட்டும் அல்ல என்னால் முடிந்த வரை என் வாசகர்களுக்கும் கடவுளின் அன்பைப் பற்றி கூறக் கடவுள் தந்த கிருபையை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துகிறேன். மீண்டும் தொடர்வேன்.
                                    வாழ்க இயேசு நாமம்!!      

Tuesday, November 27, 2018

Atheism/ Is it an Objective of Devil?? Part VI


யார் பொய் சொல்லுவார்?
நான் கடந்த கட்டுரையில் விவரித்து இருந்தது போல, நிறைய அறிவியல் கோட்பாடுகள் சந்தேகத்தை அளிப்பதாகவே இருந்தது. இந்த தாக்கத்தால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் மிகவும் நேசித்த அறிவியல். ஆம், வளர்ச்சிகள் இருந்தாலும், ஒரு சில விஷயங்கள் எட்டா கனிகள் என்பது நம்மில் பலரும் அறிந்ததே! உதாரணமாக இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒரு நாள் இறந்து தானே ஆக வேண்டும்! என்கிற மறுக்க முடியாத உண்மையை நாம் ஒரு சான்றாக எடுத்துக் கொள்ளலாம். இந்த நிலையில் எனக்குள் சிறு வயதில் எங்கோ ஒரு கிறிஸ்தவ மாநாட்டு உரையில் நான் கேட்ட ஒரு வசனம் என் மனதைத் திரும்பத் திரும்ப துளைத்துக் கொண்டிருந்தது. பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல” என்னும் இந்த வசனம் தான் அது. இந்த வசனம் என்னை மிகவும் பாதித்தது. திரும்ப திரும்ப என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. இந்த வசனத்தின் அர்த்தத்தைப் பல விதங்களில் மாற்றி அறிய முற்பட்டேன். அனைத்தும் ஒரே அர்த்தத்தை தான் தந்தது. எனக்கு கனவில் வந்த அந்த சம்பவமும் இந்த வசனத்திற்கும் இருந்த தொடர்பை ஆராயத் தொடங்கினேன். ஒரு மனிதனாக நான் பொய் கூறாமல் வாழ்வது மிகவும் கடினம். நாம் நம்மை அதிகம் நேசிப்பவர்களிடமே பொய் அதிகமாகக் கூறுகிறோம் என்றால், ஏன் மற்றவர்களிடம் நாம் பொய் கூறாதிருக்கப் போகிறோம்? என்ற சிந்தை எழுந்தது. மனிதன் கூறும் பல விஷயங்கள் பொய்யாக இருப்பதை உணர்ந்தேன். என் கேள்விகளுக்கு பதில் கிடைக்கத் தொடங்கியது. அந்த பதில் தான் இயேசு கிறிஸ்து. கடவுள் நம்மிடம் உண்மையை மறைப்பதில்லையே! என்னில் சிறிது சிறிதாக நம்பிக்கைத் துளிர் விடத் துவங்கியது. கோடான கோடி மக்களின் நம்பிக்கை எப்படி பொய்யாய் போக முடியும் என்று எண்ணினேன். அந்தக் கணத்தில் நான் மீண்டும் பிறந்தது போன்ற ஒரு உணர்வு. ஆனால் அப்போதும் கூட எனக்கு ஜெபம் செய்வதில் அவ்வளவாக ஈடுபாடு ஏற்படவில்லை. சிறிது சிறிதாக வேத வசனங்களை தியானிக்கக் கற்கத் தொடங்கினேன். கர்த்தர் என் வாழ்வை மாற்றத் தொடங்கினார்.

இன்று இந்த நாத்திகம் என்னும் படு குழியினுள் விழுந்துத் தவிக்கும் இளைஞர்களை எப்படியாவது மீட்க வேண்டும். அதற்கும் கடவுளின் அனுகிரகம் நமக்குத் தேவைப்படுகிறது. அவர் மனது வைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். மனிதனுடைய பலவீனமே இன்று அவனைத் தன்னைத் தான் தொலைத்துக் கொள்ளும் வழியைத் தெரிந்துக் கொள்ள வழி வகை செய்தது. அனைவரும் படித்து விட்டோம், நாம் செய்வது தான் சரி என்ற ஒரு முடிவிற்கு வந்து விடுகின்றனர். இவற்றை நான் பல இளைஞர்களிடம் காண்கிறேன். இதற்குப் பெற்றோரும் ஒரு விதத்தில் காரணமாக அமைந்து விடுகின்றனர். பெற்றோர் தன் குழந்தை கோவிலுக்குச் செல்லுகிறதா என்று மட்டுமே கவனிக்கின்றனர். நான் அறிந்த ஒரு சிலரோ அதைக் கூட கண்டு கொள்வதில்லை. அவர்கள் தங்கள் குழந்தை ஒரு நாத்திகவாதி என்று அவ்வளவு மமதையாக அனைவரிடமும் கூறுகின்றனர். 

இவற்றிற்கு காரணம் என்ன? ஏன் பெற்றோருக்குள்ளும் இப்படி ஒரு மாறுதல் நிகழ்கிறது? இந்த கேள்வியும் என்னுள் எழுந்தது. பல விடைகளும் கிடைத்தன. அவற்றை நான் என் அடுத்தக் கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறேன். 
                                    வாழ்க இயேசு நாமம்.


Monday, November 19, 2018

Atheism/ Is it an Objective of Devil?? Part V

செயற்கைக் கோள்கள் உண்மையாகவே உள்ளனவா?
அறிவியலில் காணப்படும் பிழைகளை ஒன்றொன்றாக நான் கற்றுக் கொள்ள ஆரம்பித்தக் காலத்தில் எனக்கு இரண்டாவதாககச் சந்தேகம் எழுந்தது, தகவல் தொழில் நுட்பப் பிரிவில் தான். ஆம், நான் தகவல் தொழில் நுட்பம் கற்றவன் அல்ல. ஆனால் எனக்கு செயற்கைக் கோள்கள் நிஜமாகவே இருக்கின்றனவா? என்ற சந்தேகம் எழுந்தது. நான் ஒரு நாள் எதேச்சையாக வலைதளத்தில் தேடிக் கொண்டிருந்த போது நான் கண்ட ஒரு விஷயம் என்னை பிரம்மிக்க வைத்தது. செயற்கைக் கோள்களைப் பற்றிய என் சந்தேகம் எனக்கு மட்டும் எழவில்லை, உலகில் வெவ்வேறு பகுதிகளைச் சார்ந்த வெவ்வேறு மனிதர்களுக்கும் எழுந்துள்ளது என்பது தான். பல பேர் யூ டியூப் என்னும் தொலைக்காட்சி வலைத்தளத்தில் காணொளிகள் மூலம் தங்கள் கருத்துக்களைக் கூறியிருந்தனர். அவர்கள் அறிவியல் அடிப்படையில் மிகத் தெளிவான விளக்கங்களை அளிக்கவில்லை. நான் அதற்கு அறிவியல் அடிப்படையிலான ஒரு விளக்கத்தைப் பெற முயன்றேன்.

வளிமண்டலத்தின் 5 அடுக்குகள் பற்றி நம்மில் பலரும் அறிந்ததே! அதில் மிகவும் வெப்பம் நிறைந்தப் பகுதி “வெப்பஅடுக்கு” இதை ஆங்கிலத்தில் “thermo sphere” என்று அழைப்பர். அந்த அடுக்கில் தான் செயற்கைக் கோள்கள் இருப்பதாக அறிவியலாளர்கள் கூறுவர். அது புவியிலிருந்து சுமார் 690 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளப் பகுதியாகும். அதற்கு வெப்ப அடுக்கு என்ற பெயர் வைத்தக் காரணமே சூரியனின் அதிகபட்ச வெப்ப நிலையை அந்த அடுக்கில் உள்ள எந்த ஒரு பொருளும் முழுவதுமாக கதிர் வீச்சு எனப்படும் வெப்ப பரிமாற்ற முறையில் உட்கிரகித்து விடும் என்பதால் தான். இந்த நிலையில் அங்கு இருக்கும் செயற்கைக் கோள்கள் குறைந்தது 25000 C வெப்ப நிலையையாவது உட்கிரகித்திருக்க வேண்டும். இவ்வளவு அதிகமான வெப்ப நிலையில் செயற்கைக் கோள்களில் உபயோகிக்கக் கூடிய டைட்டானியம் மற்றும் அலுமினியம் கலந்த கலவையினாலான உலோகம் கண்டிப்பாக உருகி விடும் (கலவையின் உருகு நிலை சுமார் 17000 C மட்டுமே). மேலும் பல உலோகக் கலவைகள் இருந்தாலும் கூட வெப்ப அடுக்கில் இருக்கும் அந்த வெப்ப நிலையைத் தாங்கும் அளவுக்கு இல்லை என்பது தான் உண்மை. இங்கு செயற்கைக் கோள்கள் உருகிய நிலையில் தான் காணப்பட வேண்டும். இவற்றை நான் மிக நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டறிந்தேன். பலரிடம் இது பற்றி விவரித்தேன். ஏனெனில் பல மில்லியன் பணம் இவற்றிற்காக செலவிடப் படுகின்றன. இந்த நிலையில் அது உண்மையா? என்ற ஒரு கேள்வி எழும் போது என்னை யோசிக்க வைத்தது. மேலும் இந்தப் புவியில் பசியால் பல கோடி மக்கள் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில். அடுத்தக் கிரகத்தில் என்ன இருக்கிறது என்று அறிய முற்படுவது அவசியமான ஒன்றா? என்ற கேள்வி எழுந்தது. நீங்களே சிந்தித்துப் பாருங்கள். என் இந்தத் தேடல் மேலும் பல அதிர்ச்சியான தகவல்களுக்குள் என்னை இழுத்துச் சென்றது. அவற்றை என் பின் வரும் கட்டுரைகளில் விவரிக்கிறேன்.

நம் இளைஞர்கள் மத்தியில் நான் கண்ட மேலும் ஒரு பொல்லாத ஆளுகை போதைப் பழக்கம். என் கல்லூரியில் சென்ற வாரத்தில் ஒரு மாணவன் இந்த போதைப் பழக்கத்தால் இறந்து போனான். மிகவும் வேதனையான உண்மை. போதையில் இருக்கும் போது வாகனம் ஓட்டிக் கட்டுப் பாட்டை இழந்து இறுதியில் உயிரைப் பறிக்கும் ஒரு விபத்தாகப் போய் முடிந்திருந்தது. இந்தச் சம்பவம் என்னை மிகவும் பாதித்து இருக்கிறது. இன்றைய மாணவர்கள் தன் போதைப் பழக்கத்தை மிகவும் பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். இதில் பெருமைப் பட என்ன இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. போதைப் பழக்கம் ஏதோ ஒரு வகையில் உயிரைப் பறிக்கும் வல்லமை வாய்ந்தது. இவை கடவுளுக்கும் எதிரான ஒரு செயல் ஆகும். இவற்றை மாற்று மார்க்கங்களைப் பின்பற்றும் மற்றும் நாத்திகம் பேசித் திரியும் இளைஞர்களுக்கு நாம் எவ்வாறு புரிய வைப்பது என்றுப் புரியவில்லை. எனக்குத் தெரிந்த ஒரே வழி அவர்களுக்காக ஜெபிப்பது மட்டும் தான். என்னுடைய வேண்டுகோள் ஒன்று உண்டு. நீங்களும் இந்த இளைஞர்களுக்காக ஜெபிப்பீர்களா?

                                    வாழ்க இயேசு நாமம்!!

Tuesday, November 13, 2018

Atheism/ Is it an Objective of Devil?? Part IV


எனக்குள் எழுந்த கேள்விக்கு பதில் காண முயன்றேன். அநேக சாட்சிகளை கவனித்தேன். அவர்கள் கூறுவது பொய்யாக இருக்குமோ? என்று அவற்றை ஆராய முயன்றேன். இந்த சமயத்தில் தான் நான் மிகவும் மதித்த அறிவியலின் கோணத்தில் என்னுள் ஒரு கேள்வி எழுந்தது. என் நண்பனுடனான ஒரு விவாதத்தின் போது என்னிடம் அவன் எழுப்பிய ஒரு கேள்வி ,”கடல் அலைகள் எப்படி உருவாகின்றன?” என்று வினவினான். நான் அதற்கு அவனிடம் வழக்கமான பதிலான “நிலவின் ஈர்ப்பு விசை தான் காரணம் என்று பதில் அளித்தேன். “உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டான். “அறிவியல் அதைத் தானே கூறுகிறது” என்று பதில் அளித்தேன். அவன் நக்கலாக, “அறிவியல் என்ன கூறினாலும் நம்புவியா?” என்று வினவினான். அவன் நக்கலாகக் கூறி விட்டு சென்று விட்டான் ஆனால் என்னை அந்தக் கேள்வி மிகவும் பாதித்தது. அப்பொழுதிருந்து கடல் அலைகளுக்கான காரணத்தை அறிய சிறு ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். பல புத்தகங்கள் படித்தேன். அனைத்துமே வெறும் theory எனப்படும் கோட்பாடாகவே இருந்தது.

நிலவின் ஈர்ப்பு விசையினை விட, புவியின் ஈர்ப்பு விசை பத்து மடங்கு அதிகம். இந்த நிலையில் எப்படி புவியில் இருக்கும் ஒரு பொருளை அதை விட பத்து மடங்கு குறைவான ஈர்ப்பு விசையுள்ள நிலவால் இழுக்க முடியும்? என்ற கேள்வி பிறந்தது. இந்த ஆராய்ச்சி என்னை மேலும் பல அதிர்ச்சி அளிக்கும் உண்மைகளுக்குள் இழுத்து சென்றது. “நிலவு இருக்கட்டும், அது எப்படி சூரியனின் ஈர்ப்பு விசையை கண்டறிந்தார்கள்?”  நான் தவறான பாதையில் பயணித்துக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது மட்டும் எனக்கு அன்று புரிந்த்தது. ஏமாந்துப் போனது போல் ஒரு உணர்வு, நான் இவ்வளவு நாள் கற்றுக் கொண்ட அறிவியலில் இவ்வளவு தர்க்கங்கள். இவற்றைப் பற்றி நான் ஒரு முறை கூட சிந்தித்தது கிடையாதே! இன்னும் தோண்ட ஆரம்பித்தேன். எனக்கு ஏமாற்றங்கள் மட்டுமே பதிலாக கிடைத்துக் கொண்டிருந்தது. அவற்றை ஒவ்வொன்றாக என்னுடைய அடுத்தடுத்தக் கட்டுரைகளில் விவரிக்கிறேன்.

ஒரு தெரிந்த நண்பருடைய நண்பர் மிகவும் பக்தி வைராக்கியமான குடும்பத்தைச் சார்ந்தவர். அவருடைய முக நூல் பக்கத்தை ஒரு முறை ஆராய்ந்தப் பொழுது நான் பார்த்த ஒரு விஷயம் என்னை மிகவும் அதிர வைத்தது. அதில் கேட்டிருந்த கேள்வி “இயேசுவைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்பதற்கு அவர்கள் “இது ஒரு பெரிய நகைச்சுவை அப்படி ஒருவர் இருந்தாரா என்ன?” என்று பொருள்படும் ஆங்கில வாக்கியத்தில் பதிலை தட்டச்சு செய்து வைத்திருந்தார். ஆம், இன்று இளைஞர்கள் இவ்வாறு தான் இருக்கிறார்கள். விவாதித்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்ட மனிதன் இன்று அலைப் பேசி என்னும் சிறு உலகத்தில் சிக்கிக் கொண்டுள்ளான். அவன் நிலையோ கடவுளையே யாரென்று கேட்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது. இதற்கு நாம் எவ்வாறு தீர்வு காண போகிறோம் என்று தெரியவில்லை. எனக்கு இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கூறிய ஒரு வாக்கியம் தான் நினைவிற்கு வருகிறது. ஆம், “நான் ஒரு விஷயத்திற்காக மட்டுமே பயப்படுகிறேன், ஒரு நாள் இந்த அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியானது, நம்மிடையே இருக்கும் விவாதங்களைக் குறைக்கும். அப்போது வருங்கால தலைமுறையே முட்டாள் ஆகி விடும்” என்று 19 – ம் நூற்றாண்டிலேயே கூறி இருந்தார். அது இன்று அரங்கேறி வருவது மிகவும் வேதனையான விஷயம். இந்த நிலை மாறுமா? அடுத்தக் கட்டுரையில் சந்திப்போம். வாழ்க இயேசு நாமம்.

Monday, November 5, 2018

Atheism/ Is it an Objective of Devil?? - Part III

நாத்திகம் பற்றிய என்னுடையத் தேடலின் போது தான் அந்தக் கனவு எனக்கு வந்தது. இது வரை என் வாழ்வில் நான் கண்ட கனவுகளில் எதுவுமே இவ்வளவுத் தெளிவாக இருந்ததில்லை. ஆம், கனவு இரண்டு நிமிட நீளம் கூட இருக்கவில்லை. ஆனால், அது என் வாழ்வின் முக்கியமான மாறுதலாக அமைந்தது. நான் நடப்பதற்குக் கூட இடையூறான முட்கள் நிறைந்தப் பாதையில் சென்று கொண்டிருந்தேன். திடீரென ஒரு சத்தம் “அங்கு செல்லாதே, அது முடிவில்லாதப் பாதை திரும்பி வா” என்று கூறியது. “நான் எப்படிச் சென்றால், உங்களுக்கு என்ன?” என்று திமிருடன் வினவினேன். “உன் மேல் எப்பொழுதும் கரிசனையுடையவன் நான், நான் சொல்வதைக் கேள் திரும்பி வா” என்று பதில் கூறியது அக்குரல். எனக்கு ஒன்றுமே புரியவில்லை, “உன் கேள்விகளுக்கு நான் தெளிவான பதில்கள் தருகிறேன், தயவு செய்து திரும்பி வந்து விடு” என்று கெஞ்சலுடம் கூடிய குரலில் கூறியது. நான் தூக்கத்திலிருந்து எழுந்தேன்.  இரவு ஒரு மணிக்கு மேலாயிருந்தது. இப்படி ஒரு கனவை நான் எதிர் பார்த்தது இல்லை.

வழக்கமான கனவுகள் என் அன்றாட வாழ்வு சம்பந்தப் பட்ட இடங்களை அடிப்படையாகக் கொண்டு தான் அமையும். இது அவ்வாறு இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. நான் குழப்பத்துடன் எழுந்து விடுதியின் வெளியில் வந்து உலாவிக் கொண்டு இருந்தேன். அப்பொழுது என் மனதில் திடீரென ஒரு கேள்வி எழுந்தது. “இயேசுவுக்காக அநேக மனிதர்கள் உயிரினை இழந்துள்ளனர். மனிதன் தன் பெற்றோருக்காக, நண்பர்களுக்காக, மனைவிக்காக அல்லது குழந்தைகளுக்காகக் கூட உயிரைக் கொடுக்க விழைவதில்லை. ஆனால் தாங்கள் கண்டும் கூட இராத இந்த இயேசுவுக்காக எப்படிக் கொடுத்தனர்?” என்று. எனக்குள் எழுந்த அந்தக் கேள்வி என் வாழ்வை மாற்றப் போகிறது என்பதை நான் அன்று அறியவில்லை. அது எப்படி நிகழ்ந்தது என்று என்னுடைய அடுத்தக் கட்டுரையில் விவரிக்கிறேன்.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் நான் கண்ட மற்றுமொரு பிரச்சனை என்னவென்றால், அவர்களுக்கு கடவுளின் அன்பு புரியவில்லை என்பது தான். ஒருவர் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் புரிந்துக் கொண்டால் மட்டுமே அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் நமது நன்மைக்கென்பது நமக்குப் புரியும். அவர்கள் சத்தியத்தை அறிய முயல்வதில்லை. அது அவர்கள் தவறு அல்ல, சந்தேகத்தின் ஆவி நம்மை ஆட்டி வைத்துள்ளது என்பது தான் உண்மை. நான் இடைவிடாது ஜெபிப்பது ஒரு விஷயத்தை நோக்கி தான், “தேவனே என்னில் இருக்கும் பெருமையை சிதைத்து உம் அன்பை உணரும் படிக்கு என் இதயத்தைத் திறந்தருளும்” என்பதே. ஆம், கடவுள் நம்மிடம் பல விதங்களில் பேசுகிறார். உதாரணமாக சில பாவங்கள் நாம் செய்து முடித்தப் பின்பு, நம் மனது, ஏன் அவ்வாறு செய்தோம்? என்று நம்மை மிகவும் வருந்த வைக்கும். அது கூட கடவுள் நம்மிடம் பேசுவது தான். இல்லை என்றால் வருத்தப் பட வேண்டிய அவசியம் இருக்காதே!! நம்மால் சந்தேகத்தின் ஆவியை வெற்றிக் கொள்ள முடியுமா? அடுத்தக் கட்டுரையில் சந்திப்போம். நன்றி வணக்கம்
வாழ்க இயேசு நாமம்!!

Atheism/ Is it an Objective of Devil?? Part XIV

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே!!                   அனைவரையும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துவதில் பெரும் மகிழ்...