நாத்திகம் பற்றிய என்னுடையத் தேடலின் போது தான் அந்தக் கனவு எனக்கு வந்தது. இது வரை என் வாழ்வில் நான் கண்ட கனவுகளில் எதுவுமே இவ்வளவுத் தெளிவாக இருந்ததில்லை. ஆம், கனவு இரண்டு நிமிட நீளம் கூட இருக்கவில்லை. ஆனால், அது என் வாழ்வின் முக்கியமான மாறுதலாக அமைந்தது. நான் நடப்பதற்குக் கூட இடையூறான முட்கள் நிறைந்தப் பாதையில் சென்று கொண்டிருந்தேன். திடீரென ஒரு சத்தம் “அங்கு செல்லாதே, அது முடிவில்லாதப் பாதை திரும்பி வா” என்று கூறியது. “நான் எப்படிச் சென்றால், உங்களுக்கு என்ன?” என்று திமிருடன் வினவினேன். “உன் மேல் எப்பொழுதும் கரிசனையுடையவன் நான், நான் சொல்வதைக் கேள் திரும்பி வா” என்று பதில் கூறியது அக்குரல். எனக்கு ஒன்றுமே புரியவில்லை, “உன் கேள்விகளுக்கு நான் தெளிவான பதில்கள் தருகிறேன், தயவு செய்து திரும்பி வந்து விடு” என்று கெஞ்சலுடம் கூடிய குரலில் கூறியது. நான் தூக்கத்திலிருந்து எழுந்தேன். இரவு ஒரு மணிக்கு மேலாயிருந்தது. இப்படி ஒரு கனவை நான் எதிர் பார்த்தது இல்லை.
வழக்கமான கனவுகள் என் அன்றாட வாழ்வு சம்பந்தப் பட்ட இடங்களை அடிப்படையாகக் கொண்டு தான் அமையும். இது அவ்வாறு இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. நான் குழப்பத்துடன் எழுந்து விடுதியின் வெளியில் வந்து உலாவிக் கொண்டு இருந்தேன். அப்பொழுது என் மனதில் திடீரென ஒரு கேள்வி எழுந்தது. “இயேசுவுக்காக அநேக மனிதர்கள் உயிரினை இழந்துள்ளனர். மனிதன் தன் பெற்றோருக்காக, நண்பர்களுக்காக, மனைவிக்காக அல்லது குழந்தைகளுக்காகக் கூட உயிரைக் கொடுக்க விழைவதில்லை. ஆனால் தாங்கள் கண்டும் கூட இராத இந்த இயேசுவுக்காக எப்படிக் கொடுத்தனர்?” என்று. எனக்குள் எழுந்த அந்தக் கேள்வி என் வாழ்வை மாற்றப் போகிறது என்பதை நான் அன்று அறியவில்லை. அது எப்படி நிகழ்ந்தது என்று என்னுடைய அடுத்தக் கட்டுரையில் விவரிக்கிறேன்.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் நான் கண்ட மற்றுமொரு பிரச்சனை என்னவென்றால், அவர்களுக்கு கடவுளின் அன்பு புரியவில்லை என்பது தான். ஒருவர் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் புரிந்துக் கொண்டால் மட்டுமே அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் நமது நன்மைக்கென்பது நமக்குப் புரியும். அவர்கள் சத்தியத்தை அறிய முயல்வதில்லை. அது அவர்கள் தவறு அல்ல, சந்தேகத்தின் ஆவி நம்மை ஆட்டி வைத்துள்ளது என்பது தான் உண்மை. நான் இடைவிடாது ஜெபிப்பது ஒரு விஷயத்தை நோக்கி தான், “தேவனே என்னில் இருக்கும் பெருமையை சிதைத்து உம் அன்பை உணரும் படிக்கு என் இதயத்தைத் திறந்தருளும்” என்பதே. ஆம், கடவுள் நம்மிடம் பல விதங்களில் பேசுகிறார். உதாரணமாக சில பாவங்கள் நாம் செய்து முடித்தப் பின்பு, நம் மனது, ஏன் அவ்வாறு செய்தோம்? என்று நம்மை மிகவும் வருந்த வைக்கும். அது கூட கடவுள் நம்மிடம் பேசுவது தான். இல்லை என்றால் வருத்தப் பட வேண்டிய அவசியம் இருக்காதே!! நம்மால் சந்தேகத்தின் ஆவியை வெற்றிக் கொள்ள முடியுமா? அடுத்தக் கட்டுரையில் சந்திப்போம். நன்றி வணக்கம்
வாழ்க இயேசு நாமம்!!
No comments:
Post a Comment