யார்
பொய் சொல்லுவார்?
நான் கடந்த கட்டுரையில் விவரித்து இருந்தது
போல, நிறைய அறிவியல் கோட்பாடுகள் சந்தேகத்தை அளிப்பதாகவே இருந்தது. இந்த தாக்கத்தால்
நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் மிகவும் நேசித்த அறிவியல். ஆம், வளர்ச்சிகள்
இருந்தாலும், ஒரு சில விஷயங்கள் எட்டா கனிகள் என்பது நம்மில் பலரும் அறிந்ததே! உதாரணமாக
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒரு நாள் இறந்து தானே ஆக வேண்டும்! என்கிற மறுக்க
முடியாத உண்மையை நாம் ஒரு சான்றாக எடுத்துக் கொள்ளலாம். இந்த நிலையில் எனக்குள் சிறு
வயதில் எங்கோ ஒரு கிறிஸ்தவ மாநாட்டு உரையில் நான் கேட்ட ஒரு வசனம் என் மனதைத் திரும்பத்
திரும்ப துளைத்துக் கொண்டிருந்தது. “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல” என்னும்
இந்த வசனம் தான் அது. இந்த வசனம் என்னை மிகவும் பாதித்தது. திரும்ப திரும்ப என் காதில்
ஒலித்துக் கொண்டே இருந்தது. இந்த வசனத்தின் அர்த்தத்தைப் பல விதங்களில் மாற்றி அறிய
முற்பட்டேன். அனைத்தும் ஒரே அர்த்தத்தை தான் தந்தது. எனக்கு கனவில் வந்த அந்த சம்பவமும்
இந்த வசனத்திற்கும் இருந்த தொடர்பை ஆராயத் தொடங்கினேன். ஒரு மனிதனாக நான் பொய் கூறாமல்
வாழ்வது மிகவும் கடினம். நாம் நம்மை அதிகம் நேசிப்பவர்களிடமே பொய் அதிகமாகக் கூறுகிறோம்
என்றால், ஏன் மற்றவர்களிடம் நாம் பொய் கூறாதிருக்கப் போகிறோம்? என்ற சிந்தை எழுந்தது.
மனிதன் கூறும் பல விஷயங்கள் பொய்யாக இருப்பதை உணர்ந்தேன். என் கேள்விகளுக்கு பதில்
கிடைக்கத் தொடங்கியது. அந்த பதில் தான் இயேசு கிறிஸ்து. கடவுள் நம்மிடம் உண்மையை மறைப்பதில்லையே!
என்னில் சிறிது சிறிதாக நம்பிக்கைத் துளிர் விடத் துவங்கியது. கோடான கோடி மக்களின்
நம்பிக்கை எப்படி பொய்யாய் போக முடியும் என்று எண்ணினேன். அந்தக் கணத்தில் நான் மீண்டும்
பிறந்தது போன்ற ஒரு உணர்வு. ஆனால் அப்போதும் கூட எனக்கு ஜெபம் செய்வதில் அவ்வளவாக ஈடுபாடு
ஏற்படவில்லை. சிறிது சிறிதாக வேத வசனங்களை தியானிக்கக் கற்கத் தொடங்கினேன். கர்த்தர்
என் வாழ்வை மாற்றத் தொடங்கினார்.
இன்று இந்த நாத்திகம்
என்னும் படு குழியினுள் விழுந்துத் தவிக்கும் இளைஞர்களை எப்படியாவது மீட்க வேண்டும்.
அதற்கும் கடவுளின் அனுகிரகம் நமக்குத் தேவைப்படுகிறது. அவர் மனது வைத்தால் மட்டுமே
அது சாத்தியமாகும். மனிதனுடைய பலவீனமே இன்று அவனைத் தன்னைத் தான் தொலைத்துக் கொள்ளும்
வழியைத் தெரிந்துக் கொள்ள வழி வகை செய்தது. அனைவரும் படித்து விட்டோம், நாம் செய்வது
தான் சரி என்ற ஒரு முடிவிற்கு வந்து விடுகின்றனர். இவற்றை நான் பல இளைஞர்களிடம் காண்கிறேன்.
இதற்குப் பெற்றோரும் ஒரு விதத்தில் காரணமாக அமைந்து விடுகின்றனர். பெற்றோர் தன் குழந்தை
கோவிலுக்குச் செல்லுகிறதா என்று மட்டுமே கவனிக்கின்றனர். நான் அறிந்த ஒரு சிலரோ அதைக்
கூட கண்டு கொள்வதில்லை. அவர்கள் தங்கள் குழந்தை ஒரு நாத்திகவாதி என்று அவ்வளவு மமதையாக
அனைவரிடமும் கூறுகின்றனர்.
இவற்றிற்கு காரணம் என்ன? ஏன் பெற்றோருக்குள்ளும் இப்படி
ஒரு மாறுதல் நிகழ்கிறது? இந்த கேள்வியும் என்னுள் எழுந்தது. பல விடைகளும் கிடைத்தன.
அவற்றை நான் என் அடுத்தக் கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறேன்.
வாழ்க இயேசு நாமம்.