Wednesday, March 27, 2019

Atheism/ Is it an Objective of Devil?? Part XII


கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே!
அனைவரையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நாத்திகத்தின் வகைகளை ஒவ்வொன்றாக நான் தேடிக்கொண்டிருக்க, அதை நம் அன்றாட நிகழ்வுகளில் காண்பது சற்று மனதை பதைபதைக்க வைப்பதாக இருக்கிறது. உதாரணமாக, நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு அடையாளமே அவர் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை தான் என்றால் அது மிகையாகாது. நம்பிக்கை என்றவுடன் என் நினைவிற்கு வருவது, நாம் நிஜமாகவே அவரை விசுவாசிக்கிறோமா? அல்லது நம்புகிறோமா? என்ற கேள்விதான். ஆம், மனித வாழ்ககையானது பல்வேறு சுகம் மற்றும் துக்கங்களுடன் பிணைக்கப்பட்டது என்பதில் நமக்கு எவ்வித ஐயமும் இருக்க போவதில்லை. இதற்கு காரணமாக, ஆதாம் செய்த பாவத்தைதான் மேற்கோள் காட்டியாக வேண்டியுள்ளது. ஆம், ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தின் 17 - ம் வசனம் பின்வருமாறு கூறுகிறது "….புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்".  வருத்தத்தோடே! என்று கடவுள் கூறிய இந்த வார்த்தை மிகவும் ஆழமானது. கர்த்தர் இந்த வார்த்தையை கூறியதால் அவர் மனிதனை வெறுத்து விடவில்லை என்பது நாம் அறிந்த உண்மையே!. எப்படிப்பார்த்தாலும் அவர் கொடுத்த இந்த தண்டனை தான் பூமியில் நாம் படும் இத்தனை பாடுகளுக்கும் காரணம் என்பது மிகையாகாது. நாம் வேதாகமத்தில் காணும் மனிதர்களும் சரி, இன்றைய அல்லது பல்வேறு காலகட்ட்ங்களில் பல விஷயங்களை சாதித்த மனிதர்களும் சரி, அனைவரும் பல விதமான பாடுகளையும் கஷ்டங்களையும் அனுபவித்தவர்களாத்தான் இருந்திருக்கிறார்கள். இன்னும் ஆழமாக பார்த்தால் எனக்கு பிரசங்கியின் வாக்கியங்கள் இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. அவர் "ஓருவன் புத்தி, யுக்தி, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆகிலும் அப்படிப் பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்" என்று குறிப்பிடுகிறார். ஆம், மனித வாழ்வு அர்த்தமற்று போகும் நிலை இங்கு தான் வருகிறது. தான் சம்பாதித்ததை தான் அனுபவிக்க முடியாமல், பின் வரும் சந்ததிக்கு விட்டு செல்லும் நிலை ஏற்படும் போது.  இதை பெரிய தீங்கென்று பிரசங்கி குறிப்பிடுவதை நாம் காணமுடிகிறது. இத்தகைய சூழ்நிலையில் மனித வாழ்வு அர்த்தமற்று இருப்பது போல் நமக்குத் தோன்றி விடுகிறது. எனவே, தான் துன்பங்கள் வரும் போது நாம் கடவுளை மறந்து விடுகிறோம். ஆனால், துன்பங்கள் வரும் போது அவற்றை நாம் பெரிது படுத்தி வருந்துவதை நம் தேவன் விரும்புவதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. எடுத்துக்காதடாக, துன்பங்கள் சிலருக்கு தகாத சிநேகத்தினால் வரலாம், சிலருக்கு தகாத பழக்கவழக்கங்களால் ஏற்படலாம், மற்றும் சிலருக்கு பிள்ளைகளின் ஒழுங்கின்மையால் ஏற்படலாம். எது எப்படியோ?, துன்பங்கள் வாழ்வில் தவிர்க்க முடியாதவை என்பது மட்டும் உண்மை. 
சரி, இந்த துன்பங்கள் யாரால் ஏற்படுத்தப் படுகின்றன? இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக யோபுவின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளலாம். யோபுவைச் சோதிக்கக் கடவுள் சாதத்தானுக்கு அதிகாரம் வழங்கியதை நாம் அங்கு காண முடிகிறது. ஆனால், முதலாம் அதிகாரம் கடைசி வசனத்தில், அனைத்தையும் இழந்த யோபு பாவம் ஏதும் செய்யயவில்லை என்று குறிப்பிடப்படுவதை நாம் காண முடிகிறது. பிசாசானவன் நம்மை சோதிக்க கடவுளிடம் அனுமதி பெறுகிறான் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இந்த சோதனையை நாம் தாங்கி கடவுளில் தரித்திருந்து வெற்றி காண்பதை அவர் விரும்புவதாக நான் உணர்கிறேன். யோபுவின் விஷயத்தில் இன்னும் ஆழமாக பார்க்க போனால், இதே யோபு பின்னர் தன் நண்பர்களுடன் உரையாடுகையில் மிகவும் புலம்புவதை நம்மால் காண முடிகிறது. உதாரணமாக 6-ம் அதிகாரம் 30-ம் வசனத்தை எடுத்து கொண்டால், "என் நாவிலே அக்கிரமம் உண்டோ? என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ?" என்று அவர் கூறுகிறார். இது சற்று அகங்காரமான தோரணையுள்ள பேச்சாக இருப்பதாக நான் உணர்கிறேன். மேலும், யோபுவின் நண்பர் எலிகூ பேசுகையில் "ஆகையால் மனுஷர் அவருக்குப் பயப்படவேண்டும்; தங்கள் எண்ணத்தில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார் என்றான்." (யோபு 37:24). இந்த மதிக்கமாடடார் என்ற வார்த்தை கர்த்தரை சற்று கோபமூட்டியிருக்க வேண்டும். அவர் உடனடியாக யோபுவிடம் பேசுகிறார் (யோபு 38:2) "அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?" என்று கர்த்தர் யோபுவிடம் வினவுகிறார். இந்த சம்பவம், யோபு கர்த்தர் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழக்கவில்லை என்றாலும், அவரின் மனதில் இருந்த சில தகாத எண்ணங்களை எடுத்துக் மேற்கோள் காட்டுகிறது. அதாவது கடவுள் "சர்வ வல்லவர்" (என்ற நினைவுடன்) என்பதால் எதை வேண்டுமானாலும் செய்வார் என்று அவரும் அவர் நண்பர்களும் நினைத்துக் கொண்டிருந்ததை அந்த சம்பவங்கள் மூலமாக வெளிக்கொணர்ந்திருந்தார் கடவுள்.
ஆனால், கர்த்தர் அப்படிப்பட்டவர் அல்லவே!  நாமும் இப்படித்தான் சோதனைகள் வரும் போது கடவுள் மீதிருக்கும் நம்பிக்கையை இழந்து நிற்கிறோம் பல நேரங்களில். அவருடைய நீதி நம்முடைய நீதியை விட பெரிது என்பதையும் மறந்து விடுகிறோம். இது போன்ற நிகழ்வுகள் நாம் கர்த்தர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அவமாக்குகிறது. இன்னும் தெளிவாகச் செல்ல போனால், சஞ்சலங்கள் வரும் போது அவற்றை நம் அருள்நாதர் இயேசு கிறிஸ்துவிடம் முறையிடுவதை விட நமது நண்பர்களிடம் முறையிடுவதையே நாம் அதிகம் விரும்புகிறோம். அவர்களால் நம் சஞ்சலங்களை தீர்த்து விட முடியுமா? கடவுள் கண்ணுக்குப் புலப்படவில்லை என்பதால் அவர் நம் அருகில் இல்லை என்று நாம் சொல்லலாகுமா? அவரது வல்லமை விளங்கும் இடத்தில், அவர் ஜெயமும் கண்டிப்பாக விளங்கும் என்பது நாம் ஏற்கனவே அறிந்த ஒரு விஷயம் தானே? இதையே நம் அருள்நாதர் இயேசு கிறிஸ்து மிகத் தெளிவாக பின் வருமாறு எடுத்துக் கூறுகிறார்.
"ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள்" என்றும் "கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?" என்றும் கூறுகிறார். மேலும், "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்" என்று கூறியதன் மூலம் கடவுளை முன்னிறுத்தி, அவருக்கு முதலிடம் அளிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு உணர்த்துகிறார். கடவுளை நம்பாத பட்ச்சத்தில் நாம் பிரச்சனைகள் வரும் போது வருந்தி விடுகிறோம். ஆனால் நாம் வருந்துவதை தேவன் துளியளவும் விரும்பவில்லை. அவர் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பாக நமக்கு வரும் பிரச்சனைகளை எடுத்துக் கொள்வதைதான் அவர் விரும்புவதாக நான் உணர்கிறேன். என்னை மிகவும் கவர்ந்த ஒரு பாடல் வரி ஒன்று உண்டு. நாம் சபைகளில் ஆராதனைகளின் போது பாடும் "தேவனே நான் உமதண்டையில்" பாடலில் வரும் ஒரு வரி அது. "இத்தரையில் உந்தன் வீடாய் என் துயர் கல் நாட்டுவேனே, எந்தன் துன்பத்தில் வழியாய் இன்னும் உம்மை கிட்டிச் சேர்வேன்" என்ற வரிதான் அது. துயரப் படுகிறவர்களை இயேசு கிறிஸ்து பாக்கியவான்கள் என்று குறிப்பிடுகிறார். ஆம், துயரங்கள் கடவுளிடம் நம்மை இன்னும்  நெருக்கமாய் கொண்டு சேர்க்கும் என்பதை நாம் மனப்பூர்வமாய் விசுவாசிப்போம். 
நாத்திகத்தின் இந்த வகையை நாம் வெறுத்து ஒழித்தாலொழிய நாத்திகம் நம்மை விட்டு அகலப் போவதில்லை. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் கடவுளின் பெயரை அடிக்கடி உச்சரிக்கும் நாம் அவர் மீதிருக்கும் நம்பிக்கையை நாம் துயரங்களை எதிர்கொள்ளும் விதங்களில் காட்டினால் அவர் மிகவும் மகிழ்வார்.

அடுத்ததக் கட்டுரையில் சந்திப்போம்!!!

வாழ்க இயேசு நாமம்!!!
 


Tuesday, March 5, 2019

Atheism/ Is it an Objective of Devil?? Part XI

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே!



     அனைவரையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நாத்திகத்தைப் பற்றிய என்னுடைய தேடலில் நான் அறிந்து கொண்ட சில தகவல்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பு அளித்த கடவுளின் மேலான கிருபைக்காக அவருக்கு ஸ்தோத்திரங்கள். இந்த முறை நாத்திகத்தின் மற்றுமொரு வகையான பிறரின் குற்றங்களை மன்னியாதிருத்தலைப் பற்றிக் காண்போம்.

       இந்த மன்னிப்பு என்ற வார்த்தை வேதாகமத்தின் பல பகுதிகளில் குறிப்பாக புதிய ஏற்பாட்டின் பல பகுதிகளில் நாம் காண முடியும். உதாரணமாக, மாற்கு 11.25-ஐக் காண்போமானால், அங்கு கிறிஸ்துவானவர் மன்னிப்பின் முக்கியத்துவம் பற்றி மிகவும் தெளிவாக எடுத்துக் பின் வருவது போல் எடுத்துக் கூறுகிறார். “நீங்கள் நின்று ஜெபம் பண்ணும் போது ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.”
         கிறிஸ்துவானவர் நாம் ஜெபிக்கத் தகுதியான முதல் கட்டளையாக இந்த மன்னிக்கும் செயலை நமக்குக் கட்டளையிடுகிறார். ஆம், முதலில் நாம் பிறரிடம் உள்ள குறைகளை மன்னிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவ்வாறு நாம் செய்யும் போது, கர்த்தர் நம் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பினை நாம் அதிகப் படுத்திக் கொள்வதாக நான் உணர்கிறேன். நம் தேவனாகியக் கர்த்தர் கிருபை நிறைந்தவர் என்பதை நாம் அறிவோம். ஆனால், அவர் ஆதாம் பாவம் செய்த போது, அவனை அழித்து விடாமல், அவனை மன்னித்து இந்த உலகில் வாழ அருள் புரிந்தார். அவன் சந்ததித் தழைக்கவும் உதவினார். அவர் செய்த இச்செயலை நாம் கிருபை என்று எடுத்துக் கொண்டால், அந்தக் கிருபை மன்னிப்பு என்னும் வேரிலிருந்து முளைத்ததாகத்தான் இருக்கிறது என்பதை நாம் உற்று நோக்கக் கடமைப் பட்டிருக்கிறோம். நீதிமொழிகள் 24:17-ல் சாலமோன் சொன்னது போல “உன் சத்துரு விழும் போது சந்தோஷப்படாதே, அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.” நம்மை விரோதிகளாகப் பாவித்து, நமக்கு விரோதமாகச் செயல்கள் செய்பவர்கள் இடறல் அடையும் போது, அதற்காகச் சந்தோஷப்படாமல், அவர்களுக்காக ஜெபிப்பதை நம்முடைய தேவனாகியக் கர்த்தர் விரும்புகிறார். தாவீது, அரசனாகிய சவுல் இறந்தான் என்று கேட்டபொழுது மிகவும் துக்கமடைந்து தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, உபவாசமிருந்து புலம்பி அழுதான் என்று 2 சாமுவேல் முதலாம் அதிகாரத்திலே வாசிக்கிறோம். ஆம், தாவீதைக் கொலை செய்ய வஞ்சகத்தோடு துரத்தியவன்தான் சவுல். தன்னை எதிரியாகப் பாவித்தவனுக்காக மனம் வருந்திய தாவீதுடைய அந்த மன்னிக்கும் குணம்தான் அவனை மிக அதிகமாக உயர்த்தியது என்பதை நாம் மறுக்க இயலாது.
         மன்னிப்புப் பற்றி நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது. ஒரு முறை சீமோன் பேதுரு என் சகோதரனை எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று கேட்டதற்கு, ஏழு எழுபது முறை மன்னிக்க வேண்டும் என்று கூறுகிறார். மேலும், அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையில் கூட முதலில் நம் அனைவரையும் மன்னிக்கக் கோரி பிதாவினிடத்தில் வேண்டினார் என்பதே நிதர்சனமான உண்மை. இந்தச் சம்பவங்கள் அனைத்துமே மன்னித்தலின் இன்றியமையாமையை நமக்கு உணர்துகிறது. நாம் மன்னியாதிருப்போமேயானால் நம் பாவங்கள் நமக்கு மன்னிக்கப் படாமல் போகும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

      இப்படி மன்னிப்பு என்னும் வார்த்தைக்குள் அடங்கியிருக்கும் உண்மைகளை நம்மை உணர்விடாமல் தடுப்பது தான் பிசாசானவனின் தலையாய நோக்கமாக இருக்கிறது. இன்று சபைகளுக்குள்ளும் இது போன்ற பிரச்சனைகள் அதிகம் பிசாசினால் கொண்டு வரப்பட்டு, விசுவாசிகளுக்குள் குழப்பங்கள் ஏற்பட்டு, தீர்வு காண முடியாத அளவு அவர்களின் இருதயங்கள் கடினப்பட்டு இருக்கின்றன.  இந்தக் காரியங்களை நாம் ஆராய்ந்துப் பார்த்தால், நாம் இங்கும் கர்த்தரின் வார்த்தைகளைக் கைக்கொள்ளாமல் ஒரு நாத்திக வாதியாகவே நடந்து கொள்கிறோம். இந்த நாத்திகத்தின் இன்னுமொரு வகையை நாம் ஜெபத்துடனே திறமையாகக் கையாண்டு கர்த்தருடைய நாமத்தினை மகிமைப் படுத்தக் கடமைப்பட்டவர்களாகவும், அழைக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். நாம் செய்யும் இந்த தவறு “ஈகோ” என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் நான் எனும் அகங்கார வகையைத்தான் சாருகிறது. ஜெபத்துடன், நாத்திகத்தின் இந்த வகையை நம்மால் ஜெயம் கொள்ள முடியும் என்று நாம் இயேசுவின் நாமத்தினால் விசுவாசிப்போம்.

                 அடுத்தக் கட்டுரையில் சந்திப்போம். வாழ்க இயேசு நாமம்.


Tuesday, January 22, 2019

Atheism/ Is it an Objective of Devil?? Part X


கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே,
சென்ற கட்டுரையில் நாத்திகத்தின் ஒரு வகையான புறக்கணித்தலினைப் பற்றி எழுதியிருந்தேன். எத்தனை பேர் மனதில் அது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், நாம் அவற்றை உண்மை என்று ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். புறக்கணித்தல் என்னும் இந்த வார்த்தையினைக் கடவுள் விரும்புகிறாரா? ஆம், அவர் ஒரு சில இடங்களில் புறக்கணித்தல் என்பதை விரும்புகிறார். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக் சங்கீதம் முதல் அதிகாரம் முதல் வசனத்தைக் குறிப்பிடலாம். சங்கீதக்காரன் மூன்று விஷயங்களை புறக்கணிக்குமாறு கூறுகிறான். ஆம், துன்மார்க்கரின் ஆலோசனை, பாவிகளுடைய வழி மற்றும் பரியாசக்காரன் உட்காரும் இடத்தில் உட்காராமல் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகிறார். இந்தப் பரியாசக்காரக்காரர் என்னும் வார்த்தை ஆங்கிலத்தில் “scoffers” என்று கூறப்பட்டுள்ளது (KJV and ESV). அந்த வார்த்தைக்கு நிந்தனைக்காரர் என்றும் இன்னொரு பொருளுண்டு. 
A quote on ignorance of God's word

ஆம், கடவுள் மேற்கூறிய மார்க்கங்களில் எதிலும் நம் நிழல் செல்வதைக் கூட விரும்பவில்லை. இவை போலத் தீய வழிகளை நாம் புறக்கணிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். அடுத்து இரண்டாவது வசனத்தில் சங்கீதக்காரன் எழுதுகிறான், “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து” என்று, ஆம் இந்த புறக்கணிப்பைப் பற்றிதான் நான் சென்ற கட்டுரையில் கூறியிந்தேன். அவருடைய வேதத்தில் நாம் பிரியமாயிருக்கிறோம் என்று சொல்லிக் கொள்வதில் எந்த உபயோகமும் இல்லை. அது உலகப் பிரகாரமான ஒரு வார்த்தையாகவே இருக்கும். பிரியமாயிருக்கிறோம் என்பதை எந்த விதத்தில் நாம் வெளிப்படுத்தப் போகிறோம்? அதற்கான பதிலையும் அடுத்த வார்த்தையிலேயே சொல்கிறார். “இரவும் பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிற மனுஷன் பாக்கியவான்” என்று. எப்போதும் அவர் வேதத்தினைப் பற்றி உரையாடிக் கொண்டும் தியானித்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்றும் கடவுள் விரும்புகிறார். முக்கியமாக வாலிபப் பிராயத்திலே இருக்கும் நம்மிடம் அவர் இவற்றை அதிகமாக எதிர்பார்க்கிறார். பிரசங்கி 12:1-ல் “நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” என்று சாலமன் குறிப்பிடுகிறார். நினைப்பது என்பது அவருடைய வேதத்தினை தியானிப்பது அதிலே பிரியமாயிருப்பது என்று அனைத்து அர்த்தங்களையும் உள்ளடக்கியதே. நாத்திகத்தின் ஒரு பிரிவான இந்த புறக்கணித்தலினால் நம் கிறிஸ்தவ இளைய சமுதாயம் மிகவும் துன்புறுவதை என்னால் காணமுடிகிறது. அவர்கள் மார்க்கம் தப்பி நடப்பதற்கு இந்த புறக்கணித்தல் என்னும் நாத்திகத்தின் ஒரு வகை மிகப் பெரியக் காரணமாக அமைகிறது.  நாம் வீட்டிலாது கர்த்தருடைய வேதத்தினை அனுதினமும் தியானித்து அவற்றின் வெளிப்பாடுகளை பிள்ளைகளுடனும் நம் சுற்றத்தாருடனும் பகிர்ந்து கொண்டால் அந்த வார்த்தைகள் அவர்களை இத்தீமையான வழிகளிலிருந்து மீட்டெடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நமக்குள் விவாதங்கள் இன்னும் வலுப் பெற வேண்டும். 
St. Jerome's quote on Ignorance of God's word

நான் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது எனக்குள் தோன்றிய இன்னுமொரு கருத்து, “நாம் கர்த்தருடைய வார்த்தைகளை தியானித்து அறியாவிட்டால், வரும் பிரச்சனை மிகவும் கொடியதாக இருக்கும்”. இதற்கு உதாரணமாக நமக்கு வேதத்தில் தெரியாத ஒரு பகுதியை ஒருவர் நம்மிடம் விவரிக்கும் போது நாம் அவர் கூறுவதை அப்படியே நம்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றோம். இந்த மாதிரியான சூழல்கள் நம்மை தவறான புரிந்துணரல்களுக்கு ஆள்படுத்தும். நாம் இவ்வாறு வேதத்தினைத் தவறாகப் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதே சாத்தானின் நோக்கமாக இருக்கிறது. இதுவரை வாழ்ந்த தலை முறைகளில் வேதாகமத்தை அதிகமாக அதுவும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் உபயோகிக்கும் வாய்ப்பு நம் தலைமுறையினருக்குதான் கிடைத்திருக்கிறது. ஆம், கைப்பேசிகள், கணினிகள், இணையம் மற்றும் கைப்பிரதிகள் என அனைத்து விதங்களிலும் வேதாகமத்தை கற்பதற்கான வாய்ப்புகள் நமக்கு ஏராளம். ஆனால், நாம் அவற்றை எவ்வளவு உபயோகிக்கிறோம்? சிந்தித்து பார்க்க வேண்டிய தருணம் இது. 
தினமும் திருமறை அருந்து, அதுவே உன் நோய் தீர்க்கும் மருந்து    
      அடுத்தக் கட்டுரையில் சந்திப்போம். வாழ்க இயேசு நாமம்.

Saturday, January 5, 2019

Atheism/ Is it an Objective of Devil?? Part IX

நாம் கடவுளைப் புறக்கணிக்கிறோமா?

                    இந்த உலகில் நான் கண்ட மற்றுமொரு நாத்திகத்திற்கீடான செயல் தான், “ignorance” என்று ஆங்கிலத்தில் பொருள் படும் புறக்கணிக்கும் செயல். இவற்றை நான் கிறிஸ்தவர்களிடமும் காணத் தவறவில்லை. நாம் புறக்கணித்தல் என்றவுடன் நம்மை விட வசதியிலோ அல்லது படிப்பறிவிலோ அல்லது உத்தியோக ரீதியிலோ சற்று குறைவாகத் தோன்றுபவர்களைப் பேசாமல் இருந்தோ அல்லது அவர்களை மதிக்காது இருப்பது போன்றவை தான் என்று நினைத்துக் கொள்கிறோம். அது, பெருமை என்னும் மற்றொரு நாத்திக வழியைத் தான் சேரும். பொதுவாக கடவுளின் வார்த்தைகளை நாம் கேட்க மறுப்பது கூட புறக்கணித்தலில் சேரும் என்பதை நாம் மறுக்க இயலாது. இவற்றை நான் பல்வேறு இடங்களில் கண்டிருக்கிறேன். உதாரணமாக நான் கடவுளின் வார்த்தைகளை நண்பர்களிடம் கூற முற்படும் போது அவர்கள் விடும் பெருமூச்சு “என்னடா இவன் ஆரம்பிச்சுட்டான்” என்று அவர்கள் கூறுவது போல் இருக்கும். அவர்கள் கடவுளின் வார்த்தைகளை கேட்க விரும்பவில்லையா? அல்லது என் வாயிலிருந்து அவற்றைக் கேட்க விரும்பவில்லையா? என்பது எனக்குப் புரிவதில்லை. அது எப்படியோ இருந்து விட்டு போகட்டும் என்று என்னால் விட்டு விட முடிவதில்லை. நான் இவற்றை பொல்லாத ஆவிகளின் செயல்களாகத்தான் பார்க்கிறேன். பொல்லாத ஆவிகள் நம்மை குறி வைத்து தாக்குவதாக நான் உணர்கிறேன். நான் பார்த்து வரும் பல இடங்களில் வேதாகமத்தைப் பற்றிய விவாதங்களை இன்று வரைக் கேட்டது கிடையாது. எனக்கு ஆரம்ப காலங்களில் வேதாகமத்தின் மீது பிடிப்பில்லாமல் போனதற்கு இவற்றை ஒரு காரணமாகக் கூறலாம். வேதாகமத்தின் மீதான அவற்றிலுள்ள வசனங்கள் மீதான விவாதங்கள் தான் மிகவும் அத்தியாவசியமானது இந்தக் காலகட்டங்களில்.

ஆனால் நான் அறிந்த கிறிஸ்தவர்களில் பலர் அவ்வாறு விவாதிப்பதில்லை என்பது வேதனையான விஷயம். இவற்றை நான் புறக்கணித்தல் என்னும் பிரிவின் கீழ் கொண்டு வருகிறேன். கடவுளின் வார்த்தைகளைப் புறக்கணித்தல் ஒரு விதத்தில் நாத்திகத்தில் தான் சேருகிறது. நாத்திகம் கடவுளுக்கு எதிராக சாத்தான் செய்யும் சதி என்பதை உணர்ந்த நம்மால் அந்த நாத்திகத்தில் சேரும் பிரிவுகளை காண முடிவதில்லை இதுவும் சாத்தானின் ஒரு விதமான சதிச் செயலாகவே இருக்கிறது. நாம் கடவுளின் வார்த்தைகளை தியானித்துக் கற்றுக் கொண்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முற்பட வேண்டும். இதுவும் கடவுளுக்காக நாம் செய்யும் ஊழியக் கணக்கில் தான் சேரும் என்பது மறுக்க முடியாத உண்மை.

அப்போஸ்தலனாகிய பவுலின் கடிதங்கள் மிகவும் முக்கியமாக விவாதிக்கப் பட வேண்டியவை, விவாதம் என்பதை விட அவைப் பகிரப் பட வேண்டியவை.  என்னைப் போன்ற இளையவர்களுக்கு அவைப் புரிந்ததுக் கொள்வதற்குச் சற்றுக் கடினமாகப் படும். பெரியவர்களின் அனுபவங்கள் மற்றும் அவர்களின் புரிதல் திறன் ஆகியவை பவுலின் கடிதங்களை மட்டுமல்ல அனைத்து வசனங்களையுமே புரிந்துக் கொள்வதிலிருக்கும் குறைபாட்டை நீக்கும் என்பதில் ஐயம் இல்லை. இவை அனைத்துமே விவாதங்களினூடே சாத்தியமாகின்றன. இப்படி பட்ட விவாதங்களை ஏன் நமது சபைகள் ஆதரிப்பதில்லை என்பது எனக்குப் புரியவில்லை. கடவுளின் வார்த்தைகளை உணர்வது இந்த ஜீவியத்தில் மிகவும் இன்றியமையாத ஒன்று. என் அனுபவத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் கேட்கும் செய்திகள் மட்டுமே கடவுளின் எண்ணங்களை நமக்கு உணர்த்த முடியாது என்பதை தெளிவாகத் தெரிந்து கொண்டேன். இவற்றிற்காக நாம் என்ன செய்யப் போகிறோம்? புறக்கணித்தல் என்னும் நாத்திகத்தில் இந்த பாதையிலேயே தொடர்ந்து பயணிக்கப் போகிறோமா? என்பதை சிந்தித்துப் பார்க்கும் நேரம் இது
கடவுளின் வார்த்தைகளைப் புறக்கணிப்பது அவரையே புறக்கணிப்பதற்குச் சமமாகும். இவை எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நாத்திகத்தில் தான் சேருகின்றன.  கடவுளின் வார்த்தைகளின் மீதான விவாதங்கள் இன்றைய இளைஞர்கள் மத்தியில் நல்ல நம்பிக்கையை வளர்க்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. வழி தவறி வாழும் பல இளைஞர்களுக்கு இது போன்ற விவாதங்கள் நல் வழிகளைக் காட்டும். வாட்ஸ் ஆப் மற்றும் முக நூல் போன்றவற்றில் மூழ்கிக் கிடக்கும் இளைஞர்களை காப்பதற்கு கடவுளின் வார்த்தைகள் மட்டுமே ஒரே வழி என்று நான் கருதுகிறேன். அவை மட்டுமல்ல ஒரு நல்ல ஆரோக்கியமான விவாதமானது பல குழப்பங்களையும் தீர்க்கும் திறன் வாய்ந்ததாக இருக்கும் என்று அறிவியல் கூறுகிறது. நான் பணி புரியும் ஆராய்ச்சித் துறையிலும் விவாதங்கள் மிகவும் முக்கியமான அங்கமாக கருதப்படுகின்றது. கடவுளின் வார்த்தைகள் மீதான விவாதங்களை நாம் அதிகப் படுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நாம் அதிகமாக விவாதிப்பது கடவுளின் வார்த்தைகளாகத்தான் இருக்க வேண்டும். இதை நாம் வாழ்வில் கடை பிடிப்போமா?? அடுத்தக் கட்டுரையில் சந்திக்கலாம்.
      நன்றி, வாழ்க இயேசு நாமம்…!

Monday, December 17, 2018

Atheism/ Is it an Objective of Devil?? Part VIII


நாம் கடவுளை நிஜமாகவே பின்பற்றுகிறோமா??
வணக்கம்,
சென்ற கட்டுரையில் கூறியிருந்தது போல, நாத்திகம் காணப்படும் இடங்களை தொடர்ச்சியாக விவரிக்க முற்படுகிறேன். நாத்திகத்தை மற்றுமொரு வழியாகவும் நான் காண்கிறேன், அதுதான் சுயநலம். இதை நான் நிறைய கிறிஸ்தவர்களிடம் (என்னையும் சேர்த்து) கண்டிருக்கிறேன். சுயநலம் என்பது கண்டிப்பாக நமக்கு பரத்திலிருந்து கிடைக்கும் நன்மை கிடையாது. அது பேய்த் தனமான, சாத்தானிடமிருந்து நமக்குக் கிடைக்கக் கூடிய ஒரு சாபமாகவே இருக்கிறது. சுய நலத்தை நாம் நம் மனதில் அணிந்து கொண்டிருந்தால் அது நாம் கடவுளுக்கு எதிரான ஒரு சக்தியை நேரடியாக வணங்குவதற்குச் சமமாகும். 

நாத்திகவாதிகளிலே ஒரு பிரிவு உண்டு, அதாவது “morality” என்று ஆங்கிலத்தில் பொருள்படும் நன்னெறிகளை கடைப் பிடிப்பவர்கள். ஆனால் நான் எந்த ஒரு நாத்திகவாதியையும் கிறிஸ்தவ மிஷனெரிகளுக்கு இணையான ஒரு சவாலான ஊழிய தளங்களில் கண்டதில்லை. கடவுளுக்காக எதையும் செய்ய துணிந்த மிஷனெரிகள் இயேசு கிறிஸ்து நமக்குக் கற்று கொடுத்த அனைவரையும் அன்பு கூர்ந்து, அனைவரையும் சமமாகக் கருதி, அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு அவர்கள் மற்ற கிறிஸ்தவர்களின் உதவியுடன் பல்வேறு நற்செயல்களை செய்து வருகின்றனர். ஒரு கூறல் உண்டு, “நாத்திகவாதி நன்னெறிகளைக் கடைபிடிப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை” என்று. ஆம், அவர்கள் நாத்திகம் பேச காரணமே அவர்கள் நன்னெறிகள் என்று இயேசு கிறிஸ்து நமக்குக் கட்டளையிட்ட பல செயல்களை கடைபிடிக்க விரும்பாதது தான். இதை நான் முந்தையக் கட்டுரைகளிலேயே விவரித்துக் கூறியிருக்கிறேன். இன்றையக் கிறிஸ்தவர்களில் இந்த நன்னெறிகளைக் கடைப்பிடிப்பவர்கள் மிகவும் குறைவே. பாவத்திலிருந்து நம்மை மீட்க நமக்காக தன் உயிரை மாய்த்துக் கொண்ட இயேசு கிறிஸ்துவுக்காக நாம் செலுத்தப் போகும் நன்றி இந்த நாத்திகப் பாதை தானா?

இன்னும் தெளிவாய் சொல்லப் போனால் சுயநலம் நம்மில் இருக்குமானால் நாம் கடவுளை வணங்கியும் பலனில்லை. நாம் பிறர் நமக்குச் செய்யும் தவறுகளை மன்னிக்கவில்லை என்றால் கூட அது சுயநலக் கணக்கில் தான் சேருகிறது என்பதை நாம் மறுக்க இயலாது. இந்த நிலையில் நம்மை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.  ஆம், நான் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்த சமயத்தில் இயேசு கிறிஸ்துவை தொழாமலிருப்பது தான் நாத்திகத்தில் சேரும் என்று நினைத்தேன். ஆனால், நாளடைவில் இயேசு கிறிஸ்துவை தொழுது வரும் நாமே ஒரு வகையில் நாத்திக வாதிகளாகத்தான் செயல்பட்டு வருகிறோம் என்பது எனக்குப் புரிந்தது. கிறிஸ்துவுக்குள்ளான நமது நம்பிக்கையை அவரது வார்த்தைகளை பின்பற்றுவதன் மூலம் தான் நாம் காண்பிக்க முடியும் என்பது எனக்கு புரிந்தது. அவரது வார்த்தைகளை நாம் பின்பற்றுகிறோமா? எனக்கு இந்த நேரத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் பிறரிடம் அன்பு செலுத்துவது பற்றி கூறிய வார்த்தைகளான “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை” என்ற வார்த்தைகள் நினைவிற்கு வருகின்றன. நாம் மாற வேண்டிய நேரம் இதுதான். நம்மை முழுதும் கடவுளிடம் ஒப்படைத்து அவரது அன்பை அனைவருக்கும் உணர்த்தும் விதமாய் நடப்போமா??
மீண்டும் சந்திப்போம்!!!.
வாழ்க இயேசு நாமம்..

Friday, December 7, 2018

Atheism/ Is it an Objective of Devil?? Part VII


கடவுளை நாம் நேசிக்கிறோமா?
நாத்திகம் என்பது சாத்தானின் ஒரு வேலையாக இருக்குமோ? என்ற கண்ணோட்டத்தோடு தான் நான் இந்த வலைத் தொடரை எழுதத் தொடங்கினேன். ஆனால் கடந்த சில நாட்களில் நான் கற்ற மற்றும் பெற்ற சில அனுபவங்களை வைத்து பார்க்கும் போது எந்தவித சந்தேகமும் இல்லாமல் அது சாத்தானின் வேலை தான் என்பது நிரூபணமாகிறது. ஆம், நான் கடந்த வாரத்தில் தான் “கெவின் ஹாவிந்த்” எனப்படும் ஒரு அமெரிக்க முனைவர் பட்டம் பெற்ற, கடவுள் தான் உலகைப் படைத்தார், என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கத் துடித்த ஒரு மனிதரைப் பற்றி இணையதளம் வாயிலாக அறிந்தேன். அவர் நாத்திகவாதிகளான இரண்டு பேராசிரியர்களுடன் நடத்திய விவாதம் மிகவும் பிரபலம் வாய்ந்ததாகவும், ஆழமான கருத்துடையதாகவும் கருதப்படுகின்றது. அவர்கள் இருவரும், நீங்கள் கடவுள் உலகைப் படைத்தார் என்று கூறுகிறீர்கள், ஆனால் அந்த கடவுளை யார் படைத்தார் என்பதைக் கூறவில்லையே என்ற கேள்வியை எழுப்பிய போது அவர் அதற்கு அறிவியல் அடிப்படையிலேயே, அதுவும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்னும் இயற்பியலாளரின் கோட்பாட்டோடு தொடர்புப் படுத்தி பதில் அளித்திருந்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய ஒவவொரு காணொளிகளாக உலாவிப் பார்க்கத் தொடங்கினேன். அவரின் காணொளிகள் அனைத்துமே அறிவியலுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பி வந்தன. 2005 வரையிலான காணொளிகளை மட்டுமே என்னால் காண முடிந்தது. அதன் பிறகு ஒரு மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு 2016 ஆம் ஆண்டிலிருந்து இருந்த காணொளிகளை காண முடிந்தது. இடைப் பட்ட நாட்களில் அவர் ஒன்றுமே செய்யவில்லையா என்று ஆராய்ந்தப் பொழுது தான், அவர் செய்கைகளால் அதிருப்தி அடைந்திருந்த அமெரிக்க அரசாங்கம் மற்றும் பல அறிவியலை சார்ந்து வாழ்ந்து வந்த நிறுவனங்கள் அனைத்துமே அவர் மீது பொய்யான வழக்குளைப் போட்டு அவரை சிறைச் சாலையிலேத் தள்ளியிருந்ததுத் தெரிய வந்தது. அவரைச் சிறைப் பிடிக்கச் சென்ற போது போலீசார் மிகவும் மோசமாக அவரிடமும் அவர் மனைவியிடமும் நடந்துக் கொண்டதாகத் தெரிகிறது. இதனால் அவர் மனைவி விவாகரத்து வாங்கி அவரைப் பிரிந்துச் சென்றிருக்கிறார். அவரது சொத்துக்கள் அனைத்துமே முடக்கப்பட்டிருந்தன. 10 வருட சிறை வாசத்திற்குப் பிறகு அவர் 2015 ஆம் ஆண்டு இறுதியில் தான் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார். மீண்டும் அவர் தன் ஊழியத்தை செய்து வருகிறார். இவ்வளவு அடிகள் வாங்கியும் அவர் சளைக்கவில்லை. மீண்டும் தேவப் பணியைத் தொடர்கிறார்.
Dr. Kevin Hovind
அவர் மீது வீண் பழி சுமத்திய நாத்திக வாதிகளின் அச்செயல் சாத்தானின் செயலாகத்தான் இருக்க வேண்டும். நிரந்தரமாக அவரை அழிக்க நினைத்த சாத்தானின் சூழ்ச்சியை கடவுள் முறியடித்து அவர் பணியை மீண்டும் தொடர உதவி செய்தார்.  

நாத்திகத்தை நான் கிறிஸ்தவர்களின் இன்னொரு செயல் வழியாகவும் காண்கிறேன். இன்று என் அலுவலகத்தில் என்னுடம் பணிபுரியும் ஒரு கிறிஸ்தவ நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த போது தான் எனக்குத் தெரிந்தது நாத்திகம் இன்னொரு வாயிலாகவும் இந்த சமூகத்தில் உலவிக் கொண்டிருக்கின்றது என்பது. ஆம், அவர்கள் அறியாமையால் மக்கள் பாகால் மற்றும் மாற்று தெய்வங்களை வணங்குவதைப் பொருட்படுத்த விரும்பவில்லை. அப்படி வணங்குவது அவரவர் விருப்பம் எனவும், அவர்களைத் திருத்துவதால் நமக்கு என்ன நன்மை விளையப் போகிறது எனவும் வினவினார். இந்தக் கேள்வியை ஒரு நாத்திக வாதியின் கேள்வியாகவே நான் பாவிக்கிறேன். நம்மை நேசித்து நமக்காக உயிரைக் கொடுத்த இயேசு நாதர் இவ்வாறு நினைத்திருந்தால் நம் நிலைமை என்னவாக இருந்திருக்குமோ? அது மட்டுமில்லாமல் நம்மைப் போல் பிறனையும் நேசிக்க அவர் கூறியதன் பொருள், சுவிஷேத்தை அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் பிரசிங்கப்பது மட்டுமே என்பதை நாம் உணர வேண்டும்.

நான் சிறிதும் எதிர் பாராதது கிறிஸ்தவர்களின் இந்த மனநிலை தான். நடைமுறையில் இவற்றைக் கொண்டு வருவது சற்றுக் கடினம் தான். ஆனால் முடியாத காரியம் அல்ல. நம்மை அளவு கடந்து நேசிக்கும் நம்முடைய தெய்வம் இயேசு கிறிஸ்துவை நாமும் நேசிக்கிறோம் என்றால் இது சாத்தியமே!. நான் முதலில் இந்த வலைப்பதிவை எழுதுவது உபயோகமாக இருக்குமா என்ற ஒரு ஐய்யத்துடன் தான் ஆரம்பித்தேன். ஆனால், இன்றோ பல விஷயங்களை நான் கற்றுக் கொள்ள மட்டும் அல்ல என்னால் முடிந்த வரை என் வாசகர்களுக்கும் கடவுளின் அன்பைப் பற்றி கூறக் கடவுள் தந்த கிருபையை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துகிறேன். மீண்டும் தொடர்வேன்.
                                    வாழ்க இயேசு நாமம்!!      

Tuesday, November 27, 2018

Atheism/ Is it an Objective of Devil?? Part VI


யார் பொய் சொல்லுவார்?
நான் கடந்த கட்டுரையில் விவரித்து இருந்தது போல, நிறைய அறிவியல் கோட்பாடுகள் சந்தேகத்தை அளிப்பதாகவே இருந்தது. இந்த தாக்கத்தால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் மிகவும் நேசித்த அறிவியல். ஆம், வளர்ச்சிகள் இருந்தாலும், ஒரு சில விஷயங்கள் எட்டா கனிகள் என்பது நம்மில் பலரும் அறிந்ததே! உதாரணமாக இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒரு நாள் இறந்து தானே ஆக வேண்டும்! என்கிற மறுக்க முடியாத உண்மையை நாம் ஒரு சான்றாக எடுத்துக் கொள்ளலாம். இந்த நிலையில் எனக்குள் சிறு வயதில் எங்கோ ஒரு கிறிஸ்தவ மாநாட்டு உரையில் நான் கேட்ட ஒரு வசனம் என் மனதைத் திரும்பத் திரும்ப துளைத்துக் கொண்டிருந்தது. பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல” என்னும் இந்த வசனம் தான் அது. இந்த வசனம் என்னை மிகவும் பாதித்தது. திரும்ப திரும்ப என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. இந்த வசனத்தின் அர்த்தத்தைப் பல விதங்களில் மாற்றி அறிய முற்பட்டேன். அனைத்தும் ஒரே அர்த்தத்தை தான் தந்தது. எனக்கு கனவில் வந்த அந்த சம்பவமும் இந்த வசனத்திற்கும் இருந்த தொடர்பை ஆராயத் தொடங்கினேன். ஒரு மனிதனாக நான் பொய் கூறாமல் வாழ்வது மிகவும் கடினம். நாம் நம்மை அதிகம் நேசிப்பவர்களிடமே பொய் அதிகமாகக் கூறுகிறோம் என்றால், ஏன் மற்றவர்களிடம் நாம் பொய் கூறாதிருக்கப் போகிறோம்? என்ற சிந்தை எழுந்தது. மனிதன் கூறும் பல விஷயங்கள் பொய்யாக இருப்பதை உணர்ந்தேன். என் கேள்விகளுக்கு பதில் கிடைக்கத் தொடங்கியது. அந்த பதில் தான் இயேசு கிறிஸ்து. கடவுள் நம்மிடம் உண்மையை மறைப்பதில்லையே! என்னில் சிறிது சிறிதாக நம்பிக்கைத் துளிர் விடத் துவங்கியது. கோடான கோடி மக்களின் நம்பிக்கை எப்படி பொய்யாய் போக முடியும் என்று எண்ணினேன். அந்தக் கணத்தில் நான் மீண்டும் பிறந்தது போன்ற ஒரு உணர்வு. ஆனால் அப்போதும் கூட எனக்கு ஜெபம் செய்வதில் அவ்வளவாக ஈடுபாடு ஏற்படவில்லை. சிறிது சிறிதாக வேத வசனங்களை தியானிக்கக் கற்கத் தொடங்கினேன். கர்த்தர் என் வாழ்வை மாற்றத் தொடங்கினார்.

இன்று இந்த நாத்திகம் என்னும் படு குழியினுள் விழுந்துத் தவிக்கும் இளைஞர்களை எப்படியாவது மீட்க வேண்டும். அதற்கும் கடவுளின் அனுகிரகம் நமக்குத் தேவைப்படுகிறது. அவர் மனது வைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். மனிதனுடைய பலவீனமே இன்று அவனைத் தன்னைத் தான் தொலைத்துக் கொள்ளும் வழியைத் தெரிந்துக் கொள்ள வழி வகை செய்தது. அனைவரும் படித்து விட்டோம், நாம் செய்வது தான் சரி என்ற ஒரு முடிவிற்கு வந்து விடுகின்றனர். இவற்றை நான் பல இளைஞர்களிடம் காண்கிறேன். இதற்குப் பெற்றோரும் ஒரு விதத்தில் காரணமாக அமைந்து விடுகின்றனர். பெற்றோர் தன் குழந்தை கோவிலுக்குச் செல்லுகிறதா என்று மட்டுமே கவனிக்கின்றனர். நான் அறிந்த ஒரு சிலரோ அதைக் கூட கண்டு கொள்வதில்லை. அவர்கள் தங்கள் குழந்தை ஒரு நாத்திகவாதி என்று அவ்வளவு மமதையாக அனைவரிடமும் கூறுகின்றனர். 

இவற்றிற்கு காரணம் என்ன? ஏன் பெற்றோருக்குள்ளும் இப்படி ஒரு மாறுதல் நிகழ்கிறது? இந்த கேள்வியும் என்னுள் எழுந்தது. பல விடைகளும் கிடைத்தன. அவற்றை நான் என் அடுத்தக் கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறேன். 
                                    வாழ்க இயேசு நாமம்.


Atheism/ Is it an Objective of Devil?? Part XIV

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே!!                   அனைவரையும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துவதில் பெரும் மகிழ்...