கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே!
அனைவரையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்
நாமத்திலே வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நாத்திகத்தைப் பற்றிய என்னுடைய
தேடலில் நான் அறிந்து கொண்ட சில தகவல்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதற்கு
வாய்ப்பு அளித்த கடவுளின் மேலான கிருபைக்காக அவருக்கு ஸ்தோத்திரங்கள். இந்த முறை நாத்திகத்தின்
மற்றுமொரு வகையான பிறரின் குற்றங்களை மன்னியாதிருத்தலைப் பற்றிக் காண்போம்.
இந்த மன்னிப்பு என்ற வார்த்தை வேதாகமத்தின்
பல பகுதிகளில் குறிப்பாக புதிய ஏற்பாட்டின் பல பகுதிகளில் நாம் காண முடியும். உதாரணமாக,
மாற்கு 11.25-ஐக் காண்போமானால், அங்கு கிறிஸ்துவானவர் மன்னிப்பின் முக்கியத்துவம் பற்றி
மிகவும் தெளிவாக எடுத்துக் பின் வருவது போல் எடுத்துக் கூறுகிறார். “நீங்கள் நின்று
ஜெபம் பண்ணும் போது ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற
உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு
மன்னியுங்கள்.”
கிறிஸ்துவானவர் நாம் ஜெபிக்கத் தகுதியான
முதல் கட்டளையாக இந்த மன்னிக்கும் செயலை நமக்குக் கட்டளையிடுகிறார். ஆம், முதலில் நாம்
பிறரிடம் உள்ள குறைகளை மன்னிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவ்வாறு நாம்
செய்யும் போது, கர்த்தர் நம் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பினை நாம் அதிகப்
படுத்திக் கொள்வதாக நான் உணர்கிறேன். நம் தேவனாகியக் கர்த்தர் கிருபை நிறைந்தவர் என்பதை
நாம் அறிவோம். ஆனால், அவர் ஆதாம் பாவம் செய்த போது, அவனை அழித்து விடாமல், அவனை மன்னித்து
இந்த உலகில் வாழ அருள் புரிந்தார். அவன் சந்ததித் தழைக்கவும் உதவினார். அவர் செய்த
இச்செயலை நாம் கிருபை என்று எடுத்துக் கொண்டால், அந்தக் கிருபை மன்னிப்பு என்னும் வேரிலிருந்து
முளைத்ததாகத்தான் இருக்கிறது என்பதை நாம் உற்று நோக்கக் கடமைப் பட்டிருக்கிறோம். நீதிமொழிகள்
24:17-ல் சாலமோன் சொன்னது போல “உன் சத்துரு விழும் போது சந்தோஷப்படாதே, அவன் இடறும்போது
உன் இருதயம் களிகூராதிருப்பதாக.” நம்மை விரோதிகளாகப் பாவித்து, நமக்கு விரோதமாகச் செயல்கள்
செய்பவர்கள் இடறல் அடையும் போது, அதற்காகச் சந்தோஷப்படாமல், அவர்களுக்காக ஜெபிப்பதை
நம்முடைய தேவனாகியக் கர்த்தர் விரும்புகிறார். தாவீது, அரசனாகிய சவுல் இறந்தான் என்று
கேட்டபொழுது மிகவும் துக்கமடைந்து தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, உபவாசமிருந்து
புலம்பி அழுதான் என்று 2 சாமுவேல் முதலாம் அதிகாரத்திலே வாசிக்கிறோம். ஆம், தாவீதைக்
கொலை செய்ய வஞ்சகத்தோடு துரத்தியவன்தான் சவுல். தன்னை எதிரியாகப் பாவித்தவனுக்காக மனம்
வருந்திய தாவீதுடைய அந்த மன்னிக்கும் குணம்தான் அவனை மிக அதிகமாக உயர்த்தியது என்பதை
நாம் மறுக்க இயலாது.
மன்னிப்புப் பற்றி நம்முடைய இரட்சகராகிய
இயேசு கிறிஸ்து கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது. ஒரு முறை சீமோன் பேதுரு
என் சகோதரனை எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று கேட்டதற்கு, ஏழு எழுபது முறை மன்னிக்க
வேண்டும் என்று கூறுகிறார். மேலும், அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையில்
கூட முதலில் நம் அனைவரையும் மன்னிக்கக் கோரி பிதாவினிடத்தில் வேண்டினார் என்பதே நிதர்சனமான
உண்மை. இந்தச் சம்பவங்கள் அனைத்துமே மன்னித்தலின் இன்றியமையாமையை நமக்கு உணர்துகிறது.
நாம் மன்னியாதிருப்போமேயானால் நம் பாவங்கள் நமக்கு மன்னிக்கப் படாமல் போகும் நிலைக்குத்
தள்ளப்படுகிறோம்.
இப்படி மன்னிப்பு என்னும் வார்த்தைக்குள்
அடங்கியிருக்கும் உண்மைகளை நம்மை உணர்விடாமல் தடுப்பது தான் பிசாசானவனின் தலையாய நோக்கமாக
இருக்கிறது. இன்று சபைகளுக்குள்ளும் இது போன்ற பிரச்சனைகள் அதிகம் பிசாசினால் கொண்டு
வரப்பட்டு, விசுவாசிகளுக்குள் குழப்பங்கள் ஏற்பட்டு, தீர்வு காண முடியாத அளவு அவர்களின்
இருதயங்கள் கடினப்பட்டு இருக்கின்றன. இந்தக்
காரியங்களை நாம் ஆராய்ந்துப் பார்த்தால், நாம் இங்கும் கர்த்தரின் வார்த்தைகளைக் கைக்கொள்ளாமல்
ஒரு நாத்திக வாதியாகவே நடந்து கொள்கிறோம். இந்த நாத்திகத்தின் இன்னுமொரு வகையை நாம்
ஜெபத்துடனே திறமையாகக் கையாண்டு கர்த்தருடைய நாமத்தினை மகிமைப் படுத்தக் கடமைப்பட்டவர்களாகவும்,
அழைக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். நாம் செய்யும் இந்த தவறு “ஈகோ” என்று ஆங்கிலத்தில்
வழங்கப்படும் நான் எனும் அகங்கார வகையைத்தான் சாருகிறது. ஜெபத்துடன், நாத்திகத்தின்
இந்த வகையை நம்மால் ஜெயம் கொள்ள முடியும் என்று நாம் இயேசுவின் நாமத்தினால் விசுவாசிப்போம்.
அடுத்தக் கட்டுரையில் சந்திப்போம். வாழ்க
இயேசு நாமம்.
No comments:
Post a Comment