கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே!!
அனைவரையும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நாத்திகத்தின் வகைகளையும் அவற்றின் விளைவுகளையும் கடந்த
ஒரு வருடமாக நாம் இந்தப் பதிவுகள் வழியாக ஆராய்ந்து வருகிறோம். இந்த நாத்திகத்தினை
நான் கண்ட பேய்த் தனங்களில் தலையானதாக கருதியதாலேயே அதனைக் குறித்து ஆராய நான் முடிவு
செய்தேன். கடவுளின் மாபெரும் கிருபையால் இன்று பதினான்காவது பதிவினை வெளியிட வாய்ப்பு
கிடைத்துள்ளது. அதற்காக நம் தேவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் உற்று நோக்கிய நாத்திகத்தின் வகைகளில் பெருமையை மிகவும்
கொடிதான ஒன்றாக நான் காண்கிறேன். ஆழமாகச் சொல்லப் போனால் பெருமை எவ்வாறு நம்மை அழிக்க
வல்லது என்பதை நான் கண் கூடாகக் கண்டும் இருக்கிறேன். பெருமை தன்னை மட்டுமல்ல தன்னை
கொண்டவர்களையும் அழிக்க வல்லது என்று கூறினால் அது மிகையாகாது. தன்னை அழிப்பது என்றால்
தன் குணம், தன் நல் மனது, தன் இரக்கம், தன் கனிவு போன்ற பல நற்குணங்களையும் அழிக்க
வல்லது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பெருமை பல விதங்களில் தூண்டப்படும். இயற்கையாகவே
மனிதர்களாகிய நம்மை பெருமை ஆண்டுக் கொண்டுள்ளது. ஆம், உதாரணமாகச் சொல்லப் போனால். நாம்
அடுத்தவர்களை நியாயம் தீர்க்கும் செயலை எடுத்துக் கொள்ளலாம்.
இதைப் பற்றி நான் கடந்த கட்டுரையிலேயே தெளிவாகக் கூறியிருந்தேன்.
மேலும் ஆழமாகப் பார்க்க போனால். பெருமை பிறக்கும் இடமே நாம் அடுத்தவர்களை நியாயம் தீர்க்கும்
நேரத்தில் தான். ஆம், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறுகையில் நாம் நம் கண்ணில் இருக்கும்
உத்திரத்தை விட்டு விட்டு, நம் சகோதரர்களின்
கண்ணில் இருக்கும் துரும்பை பார்ப்பது சரியான செயல் அல்ல என்று குறிப்பிடுவதை நாம்
காண முடிகிறது. தவறு செய்வது மனித இயல்பு என்பதை நம் அருள் நாதர் நன்கு அறிந்திருந்தார்.
எனவே தான் அவர் நாம் பிறரை, ஏன் நம் உடன் பிறந்த சகோதரரைக் கூட நியாயம் தீர்ப்பதை அவர்
விரும்பவில்லை. இங்கணம் நாம் நியாயம் தீர்க்கும் பட்சத்தில் பெருமை நம்மை ஆண்டு கொள்ளுகிறது.
பெருமை எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நாத்திகத்தைத் தான் சேரும் என்பதில் எவ்வித
ஐயமும் இல்லை. மேலும் பெருமை நாம் விட்டுக் கொடுத்து செல்வதற்கான மனநிலையை தருவது இல்லை
என்பது மிகவும் வேதனையான விஷயம். உதாரணமாக, நம் உடன் வேலை புரிபவர்களுனோ அல்லது படிப்பவர்களுடனோ
ஏதாவது பிரச்சனைகள் வரும் போது நாம் அவர்களிடம் வீம்பு கொண்டு பேசாமலேயே இருந்து விடுகிறோம்.
அல்லது அவர்களுக்கு எதிராக ஏதாவது செய்து அவர்கள் மனதைப் புண் படுத்துவது போல நடந்து
விடுகிறோம்.
நாம் இவ்வாறு செய்வதற்கான காரணத்தை நான் ஆராய்ந்த போது எனக்கு விடையாகக்
கிடைத்தது நம் மனதில் நம்மைப் பற்றி இருக்கும் பெருமை மட்டும் தான் என்பது எனக்குத்
தோன்றுகிறது. ஆம், நம்மைப் பற்றிய நம் பெருமை அத்தகைய சூழல்களில் நம் யோசிக்கும் திறனை
அழித்து விடுகிறது என்பது தான் உண்மை. நானும் பல இடங்களில் இவ்வாறு நடந்திருக்கிறேன்.
அதற்கான ஒரே காரணம் நான் குறைந்தவனா என என் உள்ளில் எழும் பெருமை சார்ந்த ஒரு கேள்வி
தான். அந்த கேள்வி என்னுள்ளில் இருக்கும் சிந்திக்கும் திறனை குறைப்பதை நான் பல முறை
அனுபவித்தும் இருக்கிறேன். அமைதியாக இருக்கும் நேரங்களில் நான் அதிகமாக சிந்தித்து
செயல் படுகிறேன். ஆனால், பெருமை என்னைச் சூழும் போதோ என்னால் அவ்வாறு செயல்பட முடிவதில்லை.
யோசிக்காமல் எதையாகிலும் பேசி விடுகிறேன். இது பெருமையின் விழைவு என்பதை நான் அறியாமல்
இல்லை. இருப்பினும் இப்பெருமை என் கண்களைத் தாறுமாறாக மறைப்பதாக நான் உணர்கிறேன். பல
நேரங்களில் என்னை முழுவதுமாக ஆட்கொண்டு ஒரு சாத்தானின் முழு உருவத்தை என் வழியாய் மற்றவருக்குக்
காணச் செய்வதாகவும் நான் உணர்கிறேன். உலகைப் படைத்து, உலக மக்களின் பாவம் சுமந்த நம்
அருள்நாதர் இயேசு கிறிஸ்து ஒரு இடத்தில் கூட தன் பெருமைப் பேசியதில்லை என்பது தான்
உண்மை. பெருமைக்குரியவரே பெருமை பாராட்ட விரும்புவதில்லை என்கிற பட்சத்தில் நாம் மட்டும்
ஏன் பாராட்டிக் கொள்ள வேண்டும்??
இன்னும் ஒரு உதாரணம் சொல்லப் போனால், நாம் கிறிஸ்தவர்கள்
என்று கூறுவதைக் கூட பெருமையாகத் தான் நினைக்கிறோம் என்பது தான். நான் அறிந்த ஒரு கதையை
உதாரணமாகக் கூறுகிறேன். என் நண்பர் ஒருவருக்குத் தெரிந்த கிறிஸ்தவ தோழி, அவரது திருமண
புகைப்படத்தில் அவர் மனைவி நெற்றியில் திலகம் இட்டுள்ளதைக் கண்டு, “அவர் தவறான வழியில்
செல்வதாகவும் அவர் மனைவி அவ்வாறு திலகம் இடக்கூடாது என்றும் கூறியுள்ளார்”. என் நண்பர்
சற்று மனது நொந்தவராய் இப்படிக் கூறுகிறார்கள் என்ன செய்வது ஏன் இப்படி அடுத்தவர்கள்
நம்பிக்கையினை சிறிதும் மதிக்காமல் பேசுகிறார்கள் என்று என்னிடம் புலம்பித் தள்ளினார்.
நான் அதிலிருந்து ஒரு முக்கியமான பாடத்தினைக் கற்று கொண்டேன். ஆம், கடவுள் நம்மீது
வைத்திருக்கும் அன்பினால் அவர் நாம் எப்படிப் பட்ட பாவிகள் என்று அறிந்திருந்தும் நம்மை
பாவிகளாகவே ஏற்றுக் கொண்டு நம்மீது கிருபை மற்றும் அளவற்ற இரக்கத்தினை வைத்துள்ளார்.
இதனால், நாம் மற்றவரையும் அவர்கள் நம்பிக்கைகளையும் குறை கூறுவதற்கோ அல்லது அவற்றை
கொச்சைப் படுத்தி அவர்களிடம் கெட்டப் பெயர் எடுப்பதற்கோ அழைக்கப்படவில்லை என்பதை நன்கு
உணர்ந்து கொள்ள வேண்டும்.
நம் செயல்கள், நம் வார்த்தைகள் என அனைத்துமே அவர்கள் மனதில்
ஒரு வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் கிறிஸ்தவர்கள்
என்ற பெருமை நம்மை ஆட்கொண்டிருக்கும் பட்சத்தில் நாம் நம்மை அறியாமலேயே பிறரை வருத்தப்பட
வைத்து விடுகிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே பெருமை ஒழிய நாம் ஜெபிக்க
வேண்டும் என்பது தான் நான் கண்ட ஒரே தீர்வு. ஒருவேளை பெருமை நம்மை விட்டு அகலும் பட்சத்தில்
நம் சிந்திக்கும் திறன் உயரும். நம் பொறுமையும், இரக்கமும், விட்டு கொடுக்கும் மனப்பான்மையும்
அதிகரிக்கும். அதை காணும் மக்கள் கண்டிப்பாக நம் இயேசுவை தேடி வருவார்கள் என்பதில்
எவ்வித ஐயமும் இல்லை. “கடவுளே என் பெருமையை சிதைத்து என் மனதினைத் திறந்தருளும்” என்று
நாம் இந்த நிமிடத்திலே வேண்டி கொள்வோமா?
அடுத்தக் கட்டுரையில் சந்திப்போம்!!!! வாழ்க இயேசு நாமம்….