நாம் கடவுளை நிஜமாகவே பின்பற்றுகிறோமா??
வணக்கம்,
சென்ற கட்டுரையில் கூறியிருந்தது போல,
நாத்திகம் காணப்படும் இடங்களை தொடர்ச்சியாக விவரிக்க முற்படுகிறேன். நாத்திகத்தை மற்றுமொரு
வழியாகவும் நான் காண்கிறேன், அதுதான் சுயநலம். இதை நான் நிறைய கிறிஸ்தவர்களிடம் (என்னையும்
சேர்த்து) கண்டிருக்கிறேன். சுயநலம் என்பது கண்டிப்பாக நமக்கு பரத்திலிருந்து கிடைக்கும்
நன்மை கிடையாது. அது பேய்த் தனமான, சாத்தானிடமிருந்து நமக்குக் கிடைக்கக் கூடிய ஒரு
சாபமாகவே இருக்கிறது. சுய நலத்தை நாம் நம் மனதில் அணிந்து கொண்டிருந்தால் அது நாம்
கடவுளுக்கு எதிரான ஒரு சக்தியை நேரடியாக வணங்குவதற்குச் சமமாகும்.
நாத்திகவாதிகளிலே ஒரு பிரிவு உண்டு, அதாவது
“morality” என்று ஆங்கிலத்தில் பொருள்படும் நன்னெறிகளை கடைப் பிடிப்பவர்கள். ஆனால்
நான் எந்த ஒரு நாத்திகவாதியையும் கிறிஸ்தவ மிஷனெரிகளுக்கு இணையான ஒரு சவாலான ஊழிய தளங்களில்
கண்டதில்லை. கடவுளுக்காக எதையும் செய்ய துணிந்த மிஷனெரிகள் இயேசு கிறிஸ்து நமக்குக்
கற்று கொடுத்த அனைவரையும் அன்பு கூர்ந்து, அனைவரையும் சமமாகக் கருதி, அனைவருக்கும்
உதவ வேண்டும் என்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு அவர்கள் மற்ற கிறிஸ்தவர்களின் உதவியுடன்
பல்வேறு நற்செயல்களை செய்து வருகின்றனர். ஒரு கூறல் உண்டு, “நாத்திகவாதி நன்னெறிகளைக்
கடைபிடிப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை” என்று. ஆம், அவர்கள் நாத்திகம் பேச காரணமே அவர்கள்
நன்னெறிகள் என்று இயேசு கிறிஸ்து நமக்குக் கட்டளையிட்ட பல செயல்களை கடைபிடிக்க விரும்பாதது
தான். இதை நான் முந்தையக் கட்டுரைகளிலேயே விவரித்துக் கூறியிருக்கிறேன். இன்றையக் கிறிஸ்தவர்களில்
இந்த நன்னெறிகளைக் கடைப்பிடிப்பவர்கள் மிகவும் குறைவே. பாவத்திலிருந்து நம்மை மீட்க
நமக்காக தன் உயிரை மாய்த்துக் கொண்ட இயேசு கிறிஸ்துவுக்காக நாம் செலுத்தப் போகும் நன்றி
இந்த நாத்திகப் பாதை தானா?
இன்னும் தெளிவாய் சொல்லப் போனால் சுயநலம்
நம்மில் இருக்குமானால் நாம் கடவுளை வணங்கியும் பலனில்லை. நாம் பிறர் நமக்குச் செய்யும்
தவறுகளை மன்னிக்கவில்லை என்றால் கூட அது சுயநலக் கணக்கில் தான் சேருகிறது என்பதை நாம்
மறுக்க இயலாது. இந்த நிலையில் நம்மை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
ஆம், நான் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்த சமயத்தில்
இயேசு கிறிஸ்துவை தொழாமலிருப்பது தான் நாத்திகத்தில் சேரும் என்று நினைத்தேன். ஆனால்,
நாளடைவில் இயேசு கிறிஸ்துவை தொழுது வரும் நாமே ஒரு வகையில் நாத்திக வாதிகளாகத்தான்
செயல்பட்டு வருகிறோம் என்பது எனக்குப் புரிந்தது. கிறிஸ்துவுக்குள்ளான நமது நம்பிக்கையை
அவரது வார்த்தைகளை பின்பற்றுவதன் மூலம் தான் நாம் காண்பிக்க முடியும் என்பது எனக்கு
புரிந்தது. அவரது வார்த்தைகளை நாம் பின்பற்றுகிறோமா? எனக்கு இந்த நேரத்தில் அப்போஸ்தலனாகிய
பவுல் பிறரிடம் அன்பு செலுத்துவது பற்றி கூறிய வார்த்தைகளான “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால்,
சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன
வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப்
பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான்
ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச்
சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம்
ஒன்றுமில்லை” என்ற வார்த்தைகள் நினைவிற்கு வருகின்றன. நாம் மாற வேண்டிய நேரம் இதுதான்.
நம்மை முழுதும் கடவுளிடம் ஒப்படைத்து அவரது அன்பை அனைவருக்கும் உணர்த்தும் விதமாய்
நடப்போமா??
மீண்டும் சந்திப்போம்!!!.
வாழ்க இயேசு
நாமம்..