Monday, October 29, 2018

Atheism/ Is it an Objective of Devil?? - Part II


        நாத்திக வாதியாக இருப்பதும் அவ்வளவு சுலபமல்ல. கடவுளே இல்லை என்று கூறுபவர்கள் எந்த வித நியாயத் தீர்ப்புகளுக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லையே! எனவே அவர்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் அல்லவா? ஆனால் நான் நாத்திகம் பேசிக்கொண்டிருந்த நாட்களில் அவ்வாறு இருந்ததில்லை. எனக்குக் கடவுள் மீது கோபம் இருந்தது. ஆம், ஒரு புறம் அதிகார வர்க்கம் மக்களைச் சுரண்டி அதில் குளிர் காய்ந்துக் கொண்டிருக்க, மறு புறமோ ஏழை மக்கள் ஒரு வேளை சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் சிரமப்படுகிறார்களே! இதையெல்லாம் பார்த்தும் ஒன்றுமே செய்யாமல் அமைதியாக அமர்ந்திருப்பவர் தான் கடவுளா? என்ற கேள்வி என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்த நாட்கள் அவை. இவை கடவுள் மீது வெறுப்பை உண்டாக்கியது. அவ்வெறுப்பு இறுதியில் கடவுளே இல்லை என்ற மனநிலைக்கு என்னைத் தள்ளியது. நாத்திகம் பேசியதால் நான் ஒன்றும் கெட்டவனாக இருந்து விடவில்லை. எனக்குள் தேடல் தொடங்கியதே, நான் நாத்திகம் பேச ஆரம்பித்த அப்பொழுதிலிருந்து தான். ஏனெனில், தான் நினைப்பதுதான் சரி என்று நினைக்கும் மனநிலை மனிதர்களாகப் பிறந்த அனைவருக்குமே உள்ளதே! அது என்னிடமும் இருந்தது. நான் என் பெற்றோரிடம் நிறைய வாதிட்டிருக்கிறேன். அவர்கள் ஒரு முறை கூட தங்கள் நம்பிக்கையிலிருந்து சிதறியது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் தங்கள் வாழ்க்கையில் பல இடையூறுகளைச் சந்திது, தாங்கள் செய்த அநேக முயற்ச்சிகளில் தோல்விகளை மட்டுமே அடைந்தவர்கள் அவர்கள். எனக்கு அவர்களின் கடவுள் மீதான அந்த நம்பிக்கை ஆச்சரியத்தை அளித்தது.

     ஒரு குழப்பமான மனநிலையோடு தான் நான் முனைவர் பட்டப் படிப்பில் இணைந்தேன். நான் என் முனைவர் பட்டப் படிப்பினை அயல் நாடுகளில் உள்ள பெரிய பல்கலைக் கழகங்களில் ஏதாவது ஒன்றில் பயின்று பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். அதற்காக நிறைய முயன்றும் இருக்கிறேன். ஆனால் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. பின்பு நான் தமிழ் நாட்டிலேயே பயின்று கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். இது கூட எனக்கு ஒரு ஏமாற்றமாகத் தான் அமைந்தது. ஆம், கடவுள் நிஜமாகவே இருந்திருந்தால் எனக்கு வெளி நாட்டில் இடம் கிடைத்திருக்கும், அங்கு தானே பயின்று இருப்பேன் என்றெல்லாம் எனக்குத் தோன்றியது. இந்தச் சூழ்நிலையிலும் என் தேடலை நான் நிறுத்தி விடவில்லை. அதுவும் முனைவர் பட்டப் படிப்பு ஆரம்பித்தப் பிறகு என் சிந்திக்கும் திறன் அடுத்த நிலைக்குச் சென்றிருந்தது. நான் பெரிதாக யாரிடமும் விவாதங்கள் செய்தது கிடையாது அப்போதெல்லாம். ஏதாவது புத்தகங்களை படித்து அதிலிருந்து நான் தெரிந்து கொண்ட விஷயங்களை கூட யாரிடமும் அதிகமாக விவரித்துக் கூறியது கிடையாது. கடவுளுக்கு எதிராக புத்தகங்கள் எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டே இருந்திருக்கிறேன்.


        இந்த நிலையில் தான் 2015 – ம் ஆண்டு மே மாத இறுதியில் (தேதி எனக்குச் சரியாக நியாபகம் இல்லை) ஒரு நாள் நான் தூங்கிக் கொண்டிருந்த போது வந்த ஒரு கனவு தான் என் வாழ்க்கையை மாற்றியது. அந்த கனவு என் வாழ்வை மாற்றப் போகிறது என்பதை நான் அப்பொழுது அறியவில்லை. என்னுடைய அந்தக் கனவைப் பற்றி அடுத்தக் கட்டுரையில் நான் விவரிக்கிறேன்.


           நாத்திகம் இளைஞர்களை அதிகம் ஆளுகைச் செய்வதற்கான காரணம், அவர்களுக்கு அந்த வழி பிடித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். உதாரணமாக, வாழ்க்கையில் எதையுமே ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல், அனைத்தையும் எதேச்சையாக எடுத்துக் கொள்ளும் ஒரு இளைஞனை எடுத்துக் கொண்டால், அவன் நாத்திகம் பேசுவதற்கான காரணம், கடவுளின் வழியைப் பின் பற்றுவதை விட, உலக இன்பங்கள் அவனுக்குப் பெரிதாகத் தோன்றுவதாகத் தான் இருக்கும். அவனைப் பொறுத்த வரை நாத்திகம் பேசுவதன் மூலம் பாவம் மற்றும் பாவத்திற்கான தண்டனை ஆகியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கூட நினைக்கலாம். அவனுக்கு கடவுளின் வழிகள் பின்பற்றுவதற்கு கடினமானதாகத்தான் தோன்றும். யாருமே கடினமான சூழ்நிலைகளில் வாழ விரும்புவது இல்லையே!! எது நடந்தாலும் அது கடவுள் நமக்குத் தருவது தான் என்று ஏற்றுக் கொள்ளும் மனநிலை நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நான் அடிக்கடி கூறும் ஒரு வாக்கியம் ஒன்று உண்டு, “கடவுளுக்குள்ளான சுதந்திரம் ஒன்று நம் அனைவருக்கும் கொடுக்கப் பட்டிருக்கிறது, அது நாம் நினைப்பதையெல்லாம் செய்வதற்காகக் கொடுக்கப்பட்டது அல்ல, கடவுளின் கட்டளைகளுக்கு உட்பட்டு எதைச் செய்ய வேண்டுமோ அவற்றை மட்டுமே செய்வதற்காகக் கொடுக்கப்பட்டது”. நாம் கடவுளின் வழிகளை அறிய முடியுமா? அடுத்தக் கட்டுரையில் சந்திப்போம்.

                                                           நன்றி. வாழ்க இயேசு நாமம்.

Tuesday, October 23, 2018

Atheism/ is it an Objective of Devil?? - Part I

நான் ஒரு பாரம் பரியம் மிக்க ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். அனைத்து ஞாயிறுகளிலும் ஆராதனைகள் மற்றும் ஓய்வு நாள் பாட சாலையில் பங்கெடுப்பது என அனைத்து ஆலயம் சார்ந்த பணிகளிலும் அக்கறையோடு கலந்து கொண்டும் வந்தேன். ஆனால் என்னுள் ஒரு கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. எதனால் இந்த இயேசு என்ற மனிதர் கடவுள் என்று அனைவராலும் அழைக்கப் படுகிறார்? அப்படி என்ன அவர் செய்து விட்டார்?. அவரை சிலுவையில் அறைந்தனர் என்பதும் மற்றும் அவர் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்பதும் நான் அறிந்த ஒன்றே. இருப்பினும் இவற்றை என் மனம் ஏற்க மறுத்த காலங்கள் உண்டு. நான் அறிவியலில் அதுவும் மீநுண் துகளியல் தொழில்நுட்பப் பிரிவில் (Nanotechnoloy) முனைவர் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். என் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களானது இயற்பியலை அடிப்படையாகக் கொண்டது. 
               
எனவே எனக்கு அறிவியல் மற்றும் அதன் கண்டு பிடிப்புகள் மட்டுமே கடவுளாகப் பட்டன. இது ஒன்றும் புதிதல்ல, இந்த உலகம் ஏற்கனவே நிறைய விஞ்ஞானிகளை நாத்திக வாதிகளாகக் கண்டிருக்கிறது. நானும் அவர்கள் வழியைப் பின்பற்றி கடவுள் இல்லை, பைபிள் புனையப்பட்டப் பல கதைகளின் தொகுப்பு என்றெல்லாம் வாதமிட்டும் இருக்கிறேன். நான் எவ்வாறு கடவுளின் வழியைத் திரும்ப அடைந்தேன் என்பதை என் அடுத்தக் கட்டுரையில் விவரிக்கிறேன்.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் நாத்திகம் பேசுதல் என்பது மிகவும் பரந்துக் கிடப்பதுடன் அவர்கள் நாத்திக வாதிகள் என்று அழைக்கப்படுவதில் பெருமிதம் கொள்கின்றனர். நாத்திகம் என்பது அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் அதிகம் பரவி காணப்படும் ஒரு விஷச்செடி. இந்தியாவிலும் நாத்திக வாதிகள் இருந்திருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் அந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. ஏனெனில், இன்று அதிகம் நாத்திகம் பேசுபவர்கள் அதிகம் கிறிஸ்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். என்னை இந்த கட்டுரை எழுதத் தூண்டியதே, என் நண்பன் ஒருவன் கடவுளே இல்லை என்று பேசியது தான். அவனது அந்த பேச்சு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்னும் எத்தனை தமிழ் கிறிஸ்தவர்கள் நாத்திக வாதிகளாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நாத்திக வாதிகள் என்று சொல்லிக் கொள்வதால் தாங்கள் செய்யும் பாவங்களுக்கு தண்டனை இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? என்பதும் தெரியவில்லை. இதே மனநிலையில் (நாத்திகம் பேசுதல்) நானும் இருந்திருக்கிறேன். இவற்றிற்கான காரணங்களை நான் ஆராய்ந்து வைத்திருகிறேன். அவற்றை பின் வரும் என் கட்டுரைகளில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி வணக்கம்.  

Atheism/ Is it an Objective of Devil?? Part XIV

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே!!                   அனைவரையும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துவதில் பெரும் மகிழ்...