Monday, October 14, 2019

Atheism/ Is it an Objective of Devil?? Part XIII


கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே!!
            உங்கள் அனைவரையும் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த பதிவினை மார்ச் மாதத்தில் வெளியிட்டு இருந்தேன். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் பதிவினை வெளியிட, தேவன் தந்த கிருபைக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடைவெளியானது எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. நாத்திகத்தைப் பற்றிய என் தேடல் ஒரு நிலையில் இருந்து இப்பொழுது அடுத்த நிலைக்குச் சென்றுள்ளது என்பதும் உண்மை. கடவுள் நமக்கு வழங்கும் ஒவ்வொரு அனுபவமும் அவர் நமக்குக் கற்றுக் கொடுக்க முயலும் பாடமாகத்தான் இருக்கிறது. கடந்தப் பதிவிலே நான் விசுவாசத்தைப் பற்றியும், விசுவாசம் இழக்கும் போது நாம் நாத்திகவாதியாகிறோம் என்பது பற்றியும் விவரித்துக் கூறியிருந்தேன்.

            இன்றைய நிலையில் சாத்தானின் பல சோதனைகள் மறு உருவெடுத்து வேறு பல வழிகளில் நம்மைத் தாக்குவதாக நான் உணர்கிறேன். சாத்தானின் இந்த ஒவ்வொரு செயலுமே நாத்திகத்தைத் தான் சாரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கிறிஸ்துவை விட்டு நம்மை பிரித்து சந்தோஷப்பட்டு கொள்வது தான் சாத்தானின் தலையாய நோக்கமாக இருக்கிறது.  உதாரணமாக இன்று தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் செய்திகள் தொடங்கி, தொடர்கள், திரைப்படங்கள் என அனைத்துமே வெறுப்பு, கோபம், பழிவாங்குதல், பிற மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துதல், அதன் மூலமாய் ஏற்றத் தாழ்வுகளை விதைத்தல், போராட்டங்களைத் தூண்டுதல் என்பது போன்ற பல பேய் குணத்தினை உடைய செயல்களை தூண்டுவதாக மட்டுமே நான் உணர்கிறேன். சாத்தானின் ஒவ்வொரு செயல்களும் தெளிவாக இருப்பதாகவும் நான் உணர்கிறேன். குறிப்பாக சபைகளில் குழப்பங்கள் விழைவித்தல், அதன் மூலம் சபைகளை உடைக்க முற்படுதல், சபைகளில் நிகழும் ஒரு சில பிரச்சனைகளை மட்டுமே மேற்கோள் காட்டி பிற மக்களிடையே தவறான கருத்துகள் பரப்பப்படுவதாகவும் கேள்விப்படுகிறேன். இவை அனைத்தும் யாருடையத் தூண்டுதலின் பேரில் நடைபெறுகிறது என்பதையும் என்னால் உணர முடிகிறது. இந்த நாட்களில் ஜெபம் மிகவும் இன்றியமயாத ஒன்றாகி உள்ளது. “இடைவிடாது ஜெபியுங்கள்” என்று நமது இரட்சகர் கூறியுள்ளதன் நோக்கம் இப்பொழுது எனக்குத் தெளிவாகிறது. சாத்தானின் இந்த நாத்திகத்தினை தூண்டும் செயல்கள் அனைத்தையும் நாம் இந்தக் கட்டுரை மற்றும் இனி வரும் கட்டுரைகளில் தெளிவாக ஆராய்ந்து காண போகிறோம்.

ஊடகங்களின் வாயிலாக

            ஊடகங்களின் காலம் என்று இந்த காலத்தை தனிமைப் படுத்திக் கூறும் அளவுக்கு ஊடகங்களின் எண்ணிக்கை இன்று பெருகியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. தொலைக்காட்சிகளில் காணொலிகளாகவும், ரேடியோக்களில் ஒலிகளாகவும் மற்றும் இணையங்களில் தரவுகளாகவும் இன்று நம்மை சூறையாடி வைத்துள்ளன இந்த ஊடகங்கள். எவ்வளவு நன்மையான விஷயங்கள் இருந்தாலும், தீமையான விஷயங்கள் தான் இங்கு அதிகம் என்பதும் நம்மில் பலரும் அறிந்த உண்மையே. இவை இன்றைய இளைஞர்களை எவ்வளவு ஆழமாக பாதித்திருக்கிறது என்பதை நான் கண் கூடாக தினமும் காண்கிறேன். அவர்களின் யோசிக்கும் திறனும் சற்று குறைந்துள்ளதாகவும் நான் உணர்கிறேன். இவை எந்த மாதிரி பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது மட்டும் மிகப் பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது.

            குறிப்பாக இணையத்தின் பாதிப்பினை கூறலாம், ஆம் இணையத்தினால் இளைஞர்கள் தூங்கும் நேரத்தினைக் கூட இழந்து விட்டார்கள் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. கேம்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சூதாட்ட விளையாட்டுகளை விளையாடுவது, தவறான காணொலிகளைக் காண்பது போன்ற தாறுமாறானத் தவறுகளை அதிகமாக செய்து வருகின்றனர்.  இவை அனைத்துமே அவர்களின் சிந்திக்கும் திறனை அழித்து வருகிறது என்பதுதான் உண்மை. இன்னும் ஆழமாகச் சொல்லப் போனால் பேய் குணங்கள் விதைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளை இந்த உலகம் இன்று வரை கண்டு வருகிறது என்பது தான் உண்மை. பக்தி, யுக்தி மற்றும் பல இன்றியமையாத நல்ல குணங்களை இழந்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு கொண்டு இருக்கிறோம். நம்மை கிறிஸ்துவிடமிருந்து பிரிக்கும் எந்த ஒரு செயலும் தீமையே என்பது மட்டும் நான் அறிந்த உண்மை. இன்று கோவிலுக்கு செல்வது கூட ஒரு பகட்டான செயலாகக் கருதப்படுவது தான் வேதனையான விஷயம். கடவுளை துதிக்கச் செல்லும் நமக்குள்ளோ எண்ணிலடங்கா மனச் சங்கடங்கள். இவை அனைத்தும் சாத்தானின் வெறி ஆட்டத்தை மட்டுமே பறை சாற்றுவதாகவே உள்ளது. இவற்றை நாம் கடவுளின் துணையுடன் எதிர்க்க அழைக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். ஜெபம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. நான் என் சுய நினைவுடன் எனக்காக மேற்கொண்ட சோதனைகளில் கூட நிலை நிற்க முடியாமல் தவிக்கும் அளவுக்கு இந்த ஊடகங்களின் வல்லமை உள்ளது.

            இவ்வாறு நாம் செய்யும் ஒவ்வொரு செயலுமே கடவுளுக்கு எதிரானதாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை. நாம் பிதாவாகிய தேவனைப் போன்று பூரண சற்குணராய் இருக்க வேண்டும் என்பது மட்டுமே நமது இரட்சகரின் கனவாக உள்ளது. இயேசுவானவர் யாரையும் பாவிகளென்று தீர்க்க நாம் பாத்திரரல்ல என்னும் கருத்தை அழுத்தமாகக் கூறி வந்தார் என்பது மட்டும் உண்மை. அவரது இந்தக் கனவு நினைவாகும் பட்சத்தில், அவரது தியாகம் நம்மால் சரியாக மதிக்கப்படுவதாக அர்த்தம் ஆகி போகிறது. ஆனால், இதே வழி நம்மில் தொடரும் பட்சத்தில், நாம் சாத்தானுக்கு சேவை செய்யும் சந்ததியாக மாறும் அவல நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. நாத்திகப் பாதையில் பயணித்து வரும் நாம் கர்த்தரின் பாதைக்குத் திருப்புவோமா??

அடுத்தப் பதிவில் சந்திப்போம்……..

Atheism/ Is it an Objective of Devil?? Part XIV

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே!!                   அனைவரையும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துவதில் பெரும் மகிழ்...