Tuesday, January 22, 2019

Atheism/ Is it an Objective of Devil?? Part X


கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே,
சென்ற கட்டுரையில் நாத்திகத்தின் ஒரு வகையான புறக்கணித்தலினைப் பற்றி எழுதியிருந்தேன். எத்தனை பேர் மனதில் அது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், நாம் அவற்றை உண்மை என்று ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். புறக்கணித்தல் என்னும் இந்த வார்த்தையினைக் கடவுள் விரும்புகிறாரா? ஆம், அவர் ஒரு சில இடங்களில் புறக்கணித்தல் என்பதை விரும்புகிறார். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக் சங்கீதம் முதல் அதிகாரம் முதல் வசனத்தைக் குறிப்பிடலாம். சங்கீதக்காரன் மூன்று விஷயங்களை புறக்கணிக்குமாறு கூறுகிறான். ஆம், துன்மார்க்கரின் ஆலோசனை, பாவிகளுடைய வழி மற்றும் பரியாசக்காரன் உட்காரும் இடத்தில் உட்காராமல் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகிறார். இந்தப் பரியாசக்காரக்காரர் என்னும் வார்த்தை ஆங்கிலத்தில் “scoffers” என்று கூறப்பட்டுள்ளது (KJV and ESV). அந்த வார்த்தைக்கு நிந்தனைக்காரர் என்றும் இன்னொரு பொருளுண்டு. 
A quote on ignorance of God's word

ஆம், கடவுள் மேற்கூறிய மார்க்கங்களில் எதிலும் நம் நிழல் செல்வதைக் கூட விரும்பவில்லை. இவை போலத் தீய வழிகளை நாம் புறக்கணிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். அடுத்து இரண்டாவது வசனத்தில் சங்கீதக்காரன் எழுதுகிறான், “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து” என்று, ஆம் இந்த புறக்கணிப்பைப் பற்றிதான் நான் சென்ற கட்டுரையில் கூறியிந்தேன். அவருடைய வேதத்தில் நாம் பிரியமாயிருக்கிறோம் என்று சொல்லிக் கொள்வதில் எந்த உபயோகமும் இல்லை. அது உலகப் பிரகாரமான ஒரு வார்த்தையாகவே இருக்கும். பிரியமாயிருக்கிறோம் என்பதை எந்த விதத்தில் நாம் வெளிப்படுத்தப் போகிறோம்? அதற்கான பதிலையும் அடுத்த வார்த்தையிலேயே சொல்கிறார். “இரவும் பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிற மனுஷன் பாக்கியவான்” என்று. எப்போதும் அவர் வேதத்தினைப் பற்றி உரையாடிக் கொண்டும் தியானித்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்றும் கடவுள் விரும்புகிறார். முக்கியமாக வாலிபப் பிராயத்திலே இருக்கும் நம்மிடம் அவர் இவற்றை அதிகமாக எதிர்பார்க்கிறார். பிரசங்கி 12:1-ல் “நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” என்று சாலமன் குறிப்பிடுகிறார். நினைப்பது என்பது அவருடைய வேதத்தினை தியானிப்பது அதிலே பிரியமாயிருப்பது என்று அனைத்து அர்த்தங்களையும் உள்ளடக்கியதே. நாத்திகத்தின் ஒரு பிரிவான இந்த புறக்கணித்தலினால் நம் கிறிஸ்தவ இளைய சமுதாயம் மிகவும் துன்புறுவதை என்னால் காணமுடிகிறது. அவர்கள் மார்க்கம் தப்பி நடப்பதற்கு இந்த புறக்கணித்தல் என்னும் நாத்திகத்தின் ஒரு வகை மிகப் பெரியக் காரணமாக அமைகிறது.  நாம் வீட்டிலாது கர்த்தருடைய வேதத்தினை அனுதினமும் தியானித்து அவற்றின் வெளிப்பாடுகளை பிள்ளைகளுடனும் நம் சுற்றத்தாருடனும் பகிர்ந்து கொண்டால் அந்த வார்த்தைகள் அவர்களை இத்தீமையான வழிகளிலிருந்து மீட்டெடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நமக்குள் விவாதங்கள் இன்னும் வலுப் பெற வேண்டும். 
St. Jerome's quote on Ignorance of God's word

நான் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது எனக்குள் தோன்றிய இன்னுமொரு கருத்து, “நாம் கர்த்தருடைய வார்த்தைகளை தியானித்து அறியாவிட்டால், வரும் பிரச்சனை மிகவும் கொடியதாக இருக்கும்”. இதற்கு உதாரணமாக நமக்கு வேதத்தில் தெரியாத ஒரு பகுதியை ஒருவர் நம்மிடம் விவரிக்கும் போது நாம் அவர் கூறுவதை அப்படியே நம்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றோம். இந்த மாதிரியான சூழல்கள் நம்மை தவறான புரிந்துணரல்களுக்கு ஆள்படுத்தும். நாம் இவ்வாறு வேதத்தினைத் தவறாகப் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதே சாத்தானின் நோக்கமாக இருக்கிறது. இதுவரை வாழ்ந்த தலை முறைகளில் வேதாகமத்தை அதிகமாக அதுவும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் உபயோகிக்கும் வாய்ப்பு நம் தலைமுறையினருக்குதான் கிடைத்திருக்கிறது. ஆம், கைப்பேசிகள், கணினிகள், இணையம் மற்றும் கைப்பிரதிகள் என அனைத்து விதங்களிலும் வேதாகமத்தை கற்பதற்கான வாய்ப்புகள் நமக்கு ஏராளம். ஆனால், நாம் அவற்றை எவ்வளவு உபயோகிக்கிறோம்? சிந்தித்து பார்க்க வேண்டிய தருணம் இது. 
தினமும் திருமறை அருந்து, அதுவே உன் நோய் தீர்க்கும் மருந்து    
      அடுத்தக் கட்டுரையில் சந்திப்போம். வாழ்க இயேசு நாமம்.

Saturday, January 5, 2019

Atheism/ Is it an Objective of Devil?? Part IX

நாம் கடவுளைப் புறக்கணிக்கிறோமா?

                    இந்த உலகில் நான் கண்ட மற்றுமொரு நாத்திகத்திற்கீடான செயல் தான், “ignorance” என்று ஆங்கிலத்தில் பொருள் படும் புறக்கணிக்கும் செயல். இவற்றை நான் கிறிஸ்தவர்களிடமும் காணத் தவறவில்லை. நாம் புறக்கணித்தல் என்றவுடன் நம்மை விட வசதியிலோ அல்லது படிப்பறிவிலோ அல்லது உத்தியோக ரீதியிலோ சற்று குறைவாகத் தோன்றுபவர்களைப் பேசாமல் இருந்தோ அல்லது அவர்களை மதிக்காது இருப்பது போன்றவை தான் என்று நினைத்துக் கொள்கிறோம். அது, பெருமை என்னும் மற்றொரு நாத்திக வழியைத் தான் சேரும். பொதுவாக கடவுளின் வார்த்தைகளை நாம் கேட்க மறுப்பது கூட புறக்கணித்தலில் சேரும் என்பதை நாம் மறுக்க இயலாது. இவற்றை நான் பல்வேறு இடங்களில் கண்டிருக்கிறேன். உதாரணமாக நான் கடவுளின் வார்த்தைகளை நண்பர்களிடம் கூற முற்படும் போது அவர்கள் விடும் பெருமூச்சு “என்னடா இவன் ஆரம்பிச்சுட்டான்” என்று அவர்கள் கூறுவது போல் இருக்கும். அவர்கள் கடவுளின் வார்த்தைகளை கேட்க விரும்பவில்லையா? அல்லது என் வாயிலிருந்து அவற்றைக் கேட்க விரும்பவில்லையா? என்பது எனக்குப் புரிவதில்லை. அது எப்படியோ இருந்து விட்டு போகட்டும் என்று என்னால் விட்டு விட முடிவதில்லை. நான் இவற்றை பொல்லாத ஆவிகளின் செயல்களாகத்தான் பார்க்கிறேன். பொல்லாத ஆவிகள் நம்மை குறி வைத்து தாக்குவதாக நான் உணர்கிறேன். நான் பார்த்து வரும் பல இடங்களில் வேதாகமத்தைப் பற்றிய விவாதங்களை இன்று வரைக் கேட்டது கிடையாது. எனக்கு ஆரம்ப காலங்களில் வேதாகமத்தின் மீது பிடிப்பில்லாமல் போனதற்கு இவற்றை ஒரு காரணமாகக் கூறலாம். வேதாகமத்தின் மீதான அவற்றிலுள்ள வசனங்கள் மீதான விவாதங்கள் தான் மிகவும் அத்தியாவசியமானது இந்தக் காலகட்டங்களில்.

ஆனால் நான் அறிந்த கிறிஸ்தவர்களில் பலர் அவ்வாறு விவாதிப்பதில்லை என்பது வேதனையான விஷயம். இவற்றை நான் புறக்கணித்தல் என்னும் பிரிவின் கீழ் கொண்டு வருகிறேன். கடவுளின் வார்த்தைகளைப் புறக்கணித்தல் ஒரு விதத்தில் நாத்திகத்தில் தான் சேருகிறது. நாத்திகம் கடவுளுக்கு எதிராக சாத்தான் செய்யும் சதி என்பதை உணர்ந்த நம்மால் அந்த நாத்திகத்தில் சேரும் பிரிவுகளை காண முடிவதில்லை இதுவும் சாத்தானின் ஒரு விதமான சதிச் செயலாகவே இருக்கிறது. நாம் கடவுளின் வார்த்தைகளை தியானித்துக் கற்றுக் கொண்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முற்பட வேண்டும். இதுவும் கடவுளுக்காக நாம் செய்யும் ஊழியக் கணக்கில் தான் சேரும் என்பது மறுக்க முடியாத உண்மை.

அப்போஸ்தலனாகிய பவுலின் கடிதங்கள் மிகவும் முக்கியமாக விவாதிக்கப் பட வேண்டியவை, விவாதம் என்பதை விட அவைப் பகிரப் பட வேண்டியவை.  என்னைப் போன்ற இளையவர்களுக்கு அவைப் புரிந்ததுக் கொள்வதற்குச் சற்றுக் கடினமாகப் படும். பெரியவர்களின் அனுபவங்கள் மற்றும் அவர்களின் புரிதல் திறன் ஆகியவை பவுலின் கடிதங்களை மட்டுமல்ல அனைத்து வசனங்களையுமே புரிந்துக் கொள்வதிலிருக்கும் குறைபாட்டை நீக்கும் என்பதில் ஐயம் இல்லை. இவை அனைத்துமே விவாதங்களினூடே சாத்தியமாகின்றன. இப்படி பட்ட விவாதங்களை ஏன் நமது சபைகள் ஆதரிப்பதில்லை என்பது எனக்குப் புரியவில்லை. கடவுளின் வார்த்தைகளை உணர்வது இந்த ஜீவியத்தில் மிகவும் இன்றியமையாத ஒன்று. என் அனுபவத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் கேட்கும் செய்திகள் மட்டுமே கடவுளின் எண்ணங்களை நமக்கு உணர்த்த முடியாது என்பதை தெளிவாகத் தெரிந்து கொண்டேன். இவற்றிற்காக நாம் என்ன செய்யப் போகிறோம்? புறக்கணித்தல் என்னும் நாத்திகத்தில் இந்த பாதையிலேயே தொடர்ந்து பயணிக்கப் போகிறோமா? என்பதை சிந்தித்துப் பார்க்கும் நேரம் இது
கடவுளின் வார்த்தைகளைப் புறக்கணிப்பது அவரையே புறக்கணிப்பதற்குச் சமமாகும். இவை எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நாத்திகத்தில் தான் சேருகின்றன.  கடவுளின் வார்த்தைகளின் மீதான விவாதங்கள் இன்றைய இளைஞர்கள் மத்தியில் நல்ல நம்பிக்கையை வளர்க்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. வழி தவறி வாழும் பல இளைஞர்களுக்கு இது போன்ற விவாதங்கள் நல் வழிகளைக் காட்டும். வாட்ஸ் ஆப் மற்றும் முக நூல் போன்றவற்றில் மூழ்கிக் கிடக்கும் இளைஞர்களை காப்பதற்கு கடவுளின் வார்த்தைகள் மட்டுமே ஒரே வழி என்று நான் கருதுகிறேன். அவை மட்டுமல்ல ஒரு நல்ல ஆரோக்கியமான விவாதமானது பல குழப்பங்களையும் தீர்க்கும் திறன் வாய்ந்ததாக இருக்கும் என்று அறிவியல் கூறுகிறது. நான் பணி புரியும் ஆராய்ச்சித் துறையிலும் விவாதங்கள் மிகவும் முக்கியமான அங்கமாக கருதப்படுகின்றது. கடவுளின் வார்த்தைகள் மீதான விவாதங்களை நாம் அதிகப் படுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நாம் அதிகமாக விவாதிப்பது கடவுளின் வார்த்தைகளாகத்தான் இருக்க வேண்டும். இதை நாம் வாழ்வில் கடை பிடிப்போமா?? அடுத்தக் கட்டுரையில் சந்திக்கலாம்.
      நன்றி, வாழ்க இயேசு நாமம்…!

Atheism/ Is it an Objective of Devil?? Part XIV

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே!!                   அனைவரையும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துவதில் பெரும் மகிழ்...